search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருக்கும் காட்சி
    X
    கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருக்கும் காட்சி

    ஏ.டி.எம்.மில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள்: போலீசார் விசாரணையில் திடுக் தகவல்

    கோவையில் 2 இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பீளமேடு:

    கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம். உள்ளது.

    இந்த ஏ.டி.எம்.மையத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 200-ஐ கொள்ளையடித்து சென்றனர். கடந்த 10-ந் தேதி அதிகாலையே சம்பவம் நடந்துள்ளது. பணத்தை எடுத்த பின்னர் ஏ.டி.எம். மையத்தின் மெயின் ‌ஷட்டரை பூட்டு போட்டு பூட்டி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.

    ஏ.டி.எம்.எந்திரம் பழுது காரணமாக பூட்டப்பட்டிருக்கலாம் என கருதி யாரும் பணம் எடுக்க செல்லவில்லை. 2 நாட்களாக ஏ.டி.எம். மையம் பூட்டிக்கிடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சென்ற போது தான் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்ததும் கண்காணிப்பு காமிரா மீது கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்து அங்கு நடக்கும் சம்பவங்கள் பதிவாகாமல் செய்துள்ளனர். அலாரம் கருவியின் வயர்களை அறுத்து, கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    இந்த மையம் அமைந்துள்ள வணிகவளாகத்தில் உள்ள கடைகளின் முன்புறம் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 2 மணிக்கு 3 பேர் கும்பல் காரில் வந்து ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைவதும், அரை மணி நேரம் கழித்து பணத்துடன் வெளியேறுவதும் தெரிந்தது.

    பீளமேட்டில் தனியார் கல்லூரி அருகே உள்ள ஆக்சிஸ் வங்கியில் கடந்த 10-ந்தேதி அதிகாலை 12.15 மணிக்கு கொள்ளை முயற்சி நடந்தது. அன்று அதிகாலை 1.15 மணிக்கு தண்ணீர்பந்தல் ரோட்டில் இன்டஸ்இன்ட் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ஒரு கும்பல் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. அதன்பின்னர் தான் இந்த கொள்ளை நடந்துள்ளது.

    இந்த 3 சம்பவங்களிலும் 6 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் வந்து இரண்டாக பிரிந்து கைவரிசை காட்டி உள்ளனர். இரண்டு கார்களிலும் போலி பதிவு எண் பொருத்தி வந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவப்படம் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கிடைத்துள்ளது. கார்களில் போலி பதிவு எண் பொருத்தி உள்ளனர். இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு மதுரை வாடிப்பட்டியிலும் இதே போல கியாஸ்வெல்டிங் மூலம் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூரில் இதேபோன்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    இவை அனைத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதற்காக அங்கு கிடைத்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம். ஏ.டி.எம். தொழில்நுட்பத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்த கும்பலில் இருக்கலாம் என தெரிகிறது.

    பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட கார்கள் எந்த வழியாக சென்றது? என சோதனை சாவடிகளில் உள்ள காமிரா காட்சிகள் மூலம் விசாரித்து வருகின்றனர்.

    ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பி உள்ள தகவல் அறிந்து கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை கும்பல் இங்கு சில நாட்களுக்கு முன்பு தங்கி காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்.களை கண்காணித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே கொள்ளையர்கள் எங்கு தங்கியிருந்தார்கள்? அவர்களுக்கு யாரும் உதவி செய்தார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×