search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்காளர்கள் மறியல்
    X

    ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்காளர்கள் மறியல்

    ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருப்பதை கண்டித்து திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வாக்காளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏராளமான வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே போலி வாக்காளர்கள் என்ற பெயரில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதில் தவறாக பலர் போலி வாக்காளர்கள் என்ற பெயரில் நீக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. அவர்கள் மண்டல அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து புதிதாக பெயர் சேர்க்க 1,500 பேரிடம் இருந்து மனு பெறப்பட்டது. இந்த நிலையில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும், அதை சேர்க்க கோரியயும் தினமும் முறையிட்டு வருகிறார்கள். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று அவர்கள் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு சென்றனர்.

    போலீசார் தடுப்பு வேலி அமைத்து அவர்களை அனுமதிக்காமல் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாக்காளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் வடசென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் சுதாகரன் போலீஸ் படையுடன் வந்து சமரச பேச்சு நடத்தினார். மண்டல அதிகாரிகள் வந்து பெயர் விடுபட்டவர்கள் மனு எழுதி கொடுக்குமாறு தெரிவித்தனர்.

    இதையடுத்து வாக்காளர்கள் சமாதானம் அடைந்தனர். ஒவ்வொருவரும் பெயர் சேர்க்க கோரி மனு கொடுத்து வருகிறார்கள். இந்த மறியலால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற வாக்காளர் கூறியதாவது:-

    நான் இந்த தொகுதியில் 29 வருடம் வசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் 5 பேருக்கு ஓட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மட்டும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் போராடி வருகிறேன். இது போல் நிறைய பேரின் பெயர் விடுபட்டுள்ளது.

    ஓட்டுப் போடுவது எனது கடமை. இதற்கு தீர்வு காணவில்லை என்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிப்போம்.

    இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.
    Next Story
    ×