search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மின்சாரம் - குடிநீர் கேட்டு தொடர் போராட்டம்
    X

    குமரி மாவட்டத்தில் மின்சாரம் - குடிநீர் கேட்டு தொடர் போராட்டம்

    குளச்சல் அருகே உடையார்விளை, லெட்சுமிபுரம், அஞ்சாலி பகுதிகளில் இதுவரை மின்சாரம் வழங்கப்படாததால் அந்த பகுதி மக்கள் நேற்று மாலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    மின்கம்பங்களை சீரமைக்கும் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முழு வீச்சில் மீட்புபணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில், குளச்சல், குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் வழங்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி பகுதிகளிலும் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் குறைவான அளவே மின் வினியோகம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதனால் ஏராளமான கிராமங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. 10 நாட் கள் ஆகியும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். குடிநீர் கிடைக் காமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    மின்சாரம் கேட்டு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில், தக்கலை, என்.ஜி.ஓ. காலனி, திருவிதாங்கோடு, அஞ்சுகிராமம் பகுதிகளில் மறியல் போராட்டம் நடந்தது.

    நாகர்கோவில் குருசடி மூவேந்தர்நகர் பகுதியில் மின்சாரம் கேட்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

    குளச்சல் அருகே உடையார்விளை, லெட்சுமிபுரம், அஞ்சாலி பகுதிகளில் இதுவரை மின்சாரம் வரவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி அந்த பகுதி மக்கள் உடையார்விளை சந்திப்பில் நேற்று மாலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக இந்த போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று மாலைக்குள் மின்வினியோகம் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


    Next Story
    ×