search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்துக்கு கவர்னர் பன்வாரிலால் வருகை: அரசு அலுவலகங்களில் பரபரப்பு
    X

    மாமல்லபுரத்துக்கு கவர்னர் பன்வாரிலால் வருகை: அரசு அலுவலகங்களில் பரபரப்பு

    கவர்னர் பன்வாரிலால் இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை பார்வையிடுவதாக செய்திகள் பரவியதால் அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
    மாமல்லபுரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

    பின்னர் திடீரென அவர் கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ஹரிசரண் மற்றும் அரசு அதிகாரிகளை அழைத்து கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆய்வும் நடத்தினார்.

    கவர்னரின் திடீர் ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. சில கட்சியினர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஆய்வுப்பணி தொடரும் என்று கவர்னர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் இன்று காலை மாமல்லபுரம் சென்று அங்குள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளான, அர்ச்சுனன் தபசு, கடற்கரைகோவில், ஐந்துரதம் போன்ற பகுதிகளை பார்வையிடுவதாக செய்திகள் பரவியது.

    கவர்னர் திடீர் என அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஆய்வுகள் மேற்கொள்வாரோ என்ற பதட்டத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து விட்டனர். இதனால் மாமல்லபுரத்தில் பரபரப்பு காணப்பட்டது.

    பின்னர் குடும்பத்துடன் கவர்னர் சுற்றுலா வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்திய தொல்லியல்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி, கடலோர காவல் படை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை, மத்திய கப்பல்துறை போன்ற முக்கிய மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் கவர்னர் வந்து செல்லும் வரை அதிகாரிகள் பதட்டமாக இருப்பதாகவே தெரிகிறது.
    Next Story
    ×