search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்: விவேக்
    X

    வருமான வரித்துறை கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்: விவேக்

    வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி விவேக் கூறினார்.
    சென்னை:

    ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டி.வி.யில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றி அதன் நிர்வாக செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வருமான வரித்துறையினர் எனது வீட்டிலும் ஜெயா டி.வி. அலுவலகத்திலும் நேற்றுடன் 5 நாளாக சோதனை நடத்தினார்கள்.

    எங்கள் வீட்டில் மட்டுமல்லாமல் எங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளிலும் சோதனை நடந்தது. ஜெயா டி.வி.யையும், ஜாஸ் சினிமா நிறுவனத்தையும் கிட்டத்தட்ட 2 வருடமாக கவனித்து வருகிறேன். ஜெயா டி.வியை மார்ச் மாதம் முதல் பார்த்து வருகிறேன். ஜாஸ் சினிமா நிறுவனத்தில் 2017-ல் இருந்து நான் சி.இ.ஓ.வாக இருந்து வருகிறேன்.

    வருமான வரித்துறையினர் 5 நாள் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணங்கள் பற்றி என்னிடம் கேட்டார்கள். அவை அனைத்துக்கும் நான் விலாவாரியாக பதில் சொல்லி உள்ளேன்.

    எனது மனைவிக்கு திருமணத்தின் போது போட்ட நகைகள் பற்றி கேள்வி கேட்டார்கள். அந்த நகைகள் அனைத்துக்கும் நான் கணக்கு வைத்துள்ளேன். கண்டிப்பாக இன்னும் 2, 3 நாளில் வருமான வரித்துறையினரிடம் அதை சமர்ப்பித்து விடுவேன்.

    வருமான வரித்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர்.

    எனது டூட்டி பதில் சொல்லவேண்டியது. அதை சொல்லி விட்டேன். இதை தவிர்த்து அடுத்து கொஞ்ச நாள் அல்லது சில மாதத்தில் திரும்ப என்னை விசாரணைக்கு கூப்பிடுவார்கள். விசாரணை சமயத்தில் என்னென்ன கேள்வி கேட்பார்களோ அதற்கு பதில் சொல்வேன்.

    கே:- உங்கள் வீட்டில் என்ன எடுத்தார்கள்? எதை கைப்பற்றினார்கள்?

    ப:- கம்பெனி சம்பந்தமாக சில பொதுவான ஆவணங்களை பார்த்து எடுத்தார்கள். சில கணக்கு வழக்குகளை வைத்து கேள்வி கேட்டார்கள். சினிமா நிறுவனம், வினியோகஸ்தர்களின் ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்டவை குறித்தும் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் தெரிவித்தேன். இதை தவிர்த்து எனது மனைவியின் நகைகள் பற்றித்தான் கேள்வி கேட்டனர். வேறொன்றும் இல்லை.


    கே:- ரூ.500 கோடி அளவுக்கு ஜெயா டி.வி.யில்...?

    ப:- நான் நிருபர்களுக்குக்கு பேட்டி கொடுக்க இங்கு வரவில்லை. மிகைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு மரியாதை நிமித்தமாக சில விளக்கங்களை சொல்வதற்காக உங்களை சந்திக்கிறேன்.

    எனவே சந்தேகமான கேள்விகளுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை.

    யார் தப்பாக பணம் சம்பாத்தியம் செய்திருந்தாலும், அவர்கள் வருமான வரித்துறைக்கு வரிகட்டியாக வேண்டும். யார் தப்பு பண்ணியிருந்தாலும், அது நானாக இருக்கட்டும், நீங்களாக இருக்கட்டும் அல்லது ஒரு மந்திரியாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும்.

    இதை தவிர்த்து யூகத்தின் அடிப்படையில் தகவல் வெளியிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×