search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    சாமளாபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொது மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆயிரம் விசைத்தறிகளும் இயங்கவில்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை மூடக் கோரி பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் போராட்டம் காரணமாக சாமளாபுரம் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

    சில மாதங்களுக்கு பின் அந்த கடை காளிபாளையத்தில் திறக்கப்பட்டது. இதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த கடையும் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2-ந்தேதி இச்சிப்பட்டி ஊராட்சி தேவராயம் பாளையத்தில் சதிஷ்குமார் என்பவரது தோட்டத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது.

    இதற்கும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போராட்டம் நடத்த கூடும் என நினைத்த டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை முடிந்த பின்னர் அன்று இரவு கடையிலேயே தங்கி இருந்தனர்.

    அப்போது மதுக்கடைக்குள் படுத்திருந்து ஈரோட்டை சேர்ந்த விற்பனையாளர் தவசியப்பன் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மதுக்கடை திறந்த அன்றே ஊழியர் இறந்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து 2-ந்தேதியில் இருந்து கடை வழக்கம் போல் செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தேவராயன்பாளையம் மதுக்கடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்கள். மேலும் பெண்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த சாலை வழியாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மது கடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே இந்த மதுக் கடையை மூடக்கோரி பொது மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி சோமனூர் கொங்கு மஹாலில் பொதுமக்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக சோமனூர், கோம்பக்காடு, கோம்பக்காட்டு புதூர், இச்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் விசைத்தறிகளையும் அதன் உரிமையாளர்கள் இயக்கவில்லை.

    மேலும் விசைத்தறி உரிமையாளர்களும் இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று மாலை வரை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் அன்னூர்- காமநாயக்கன் பாளையம் சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காமநாயக்கன் பாளையம் போலீசாரும், டாஸ்மாக் மேலாளரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடை மூடப்படுவதாக தெரிவித்தனர். இதனை எழுத்து பூர்வமாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை வரை போராட்டத்தை ஒத்திவைத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ஆனாலும் இன்று பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விசைத்தறிகளும் இன்று 2-வது நாளாக இயங்கவில்லை.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று 10-க்கும் மேற்பட்ட வேன்களில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் கையில் ரே‌ஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து இருந்தனர். கலெக்டர் அலுவலகம் முன் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேவராயம்பாளையம் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் ரே‌ஷன் கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டரிடம் ஒப்படைப்பதாக அவர்கள் அறிவித்தனர்.

    இது குறித்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம். இந்த கடையால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குடிமகன்கள் மது அருந்திவிட்டு அருவருக்க தக்க வகையில் செயல்படுகிறார்கள்.

    இந்த மதுக்கடையை அகற்றுவோம் என அதிகாரிகள் உறுதி அளித்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம். அப்படி அகற்றாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும். விசைத்தறி உரிமையாளர்களும் எங்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். என்றனர்.
    Next Story
    ×