search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் சோதனையில் ஈடுபட்ட ஜெயில் வார்டனை தாக்கிய கைதி
    X

    செல்போன் சோதனையில் ஈடுபட்ட ஜெயில் வார்டனை தாக்கிய கைதி

    திருச்சி மத்திய சிறையில் செல்போன் சோதனையில் ஈடுபட்ட ஜெயில் வார்டனை கைதி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைக்காக ஜெயில் வார்டன்களை கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தீபாவளி தினத்தன்று இந்த குழுவை சேர்ந்த ஜெயில் வார்டன் புண்ணியமூர்த்தி திருச்சி சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான கைதிகள் உள்ள அறைக்கு செல்போன் சோதனைக்காக சென்றார்.

    அப்போது அங்கிருந்த கைதிகளான அய்யப்பன், ஆனந்த், ஜெகதீசன் ஆகியோர் ஒரு பிளாக்கில் இருந்து மற்றொரு பிளாக்குக்கு சென்று இருந்ததை புண்ணியமூர்த்தி கண்டார். உடனே அவர்களிடம் இது பற்றி கேட்டபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் கைதி அய்யப்பனை தாக்கினார். உடனே பதிலுக்கு அய்யப்பனும் புண்ணியமூர்த்தியை கீழே தள்ளி தாக்கினார். உடனே மற்ற வார்டன்கள் ஓடி வந்து புண்ணியமூர்த்தியை மீட்டு அழைத்து சென்றனர்.

    இது குறித்து அவர் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே புண்ணியமூர்த்தியின் நடவடிக்கையை கண்டித்து 30-க்கும் மேற்பட்ட கைதிகள் சாப்பிடமாட்டோம் என கூறி திடீர் உண்ணாவிரதம் இருந்தனர். இது பற்றி அறிந்த சிறை சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் அங்கு சென்று கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் இரவு உணவை சாப்பிட்டனர். இந்த சம்பவம் திருச்சி மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×