search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ராசிபுரம் பள்ளி நிர்வாகம் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்த கார்த்திக் என்ற மாணவரின் தந்தை மணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    பிளஸ்-2 படிப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.11 ஆயிரத்து 600 மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ராசிபுரம் தனியார் பள்ளி நிர்வாகம் சட்ட விரோதமாக ரூ.75 ஆயிரம் வசூலித்தது. இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்தேன்.

    இதனால் எனது மகனின் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழை பள்ளி நிர்வாகம் வழங்க மறுத்து விட்டது. இதன்காரணமாக எனது மகனின் உயர்கல்வி படிப்பு ஓராண்டு வீணாகி விட்டது. எனவே, மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    இந்த வழக்கு சம்பந்தமாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியும் பள்ளி நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே பள்ளி நிர்வாகம் உதாசீனப்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது.

    அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை மனுதாரரிடம் இருந்து பள்ளி நிர்வாகம் வசூலித்துள்ளது. சான்றிதழ்களை வழங்க மறுப்பதற்கான காரணத்தை கூற முடியாத காரணத்தால் தான் ஐகோர்ட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளிக்காமல் இருப்பது தெரிகிறது. இதில் இருந்தே பள்ளி நிர்வாகம் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இருப்பது ஊர்ஜிதமாகிறது.

    எனவே, மாணவரின் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழை 2 வாரத்துக்குள் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்று மாணவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் முதன்மை கல்வி அதிகாரி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

    மாணவரின் ஓராண்டு உயர்கல்வி படிப்பு வீணாக காரணமாக இருந்த பள்ளி நிர்வாகம் மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் ஐகோர்ட்டு நோட்டீசுக்கு பதில் அளிக்காமல் புறக்கணித்ததால், பள்ளி நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை சென்னை அடையாறில் உள்ள அவ்வை இல்லத்திற்கு வழங்க வேண்டும். மொத்தம் ரூ.2 லட்சத்தை பள்ளி நிர்வாகம் 2 வாரத்துக்குள் செலுத்த தவறினால் ராசிபுரம் தாசில்தார் பள்ளிக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×