search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜகோபுரம் எதிரே உள்ள சக்கர குளத்தில் கொசுக்களை அழிக்கும் மீன்களை விட்டார்.
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜகோபுரம் எதிரே உள்ள சக்கர குளத்தில் கொசுக்களை அழிக்கும் மீன்களை விட்டார்.

    தமிழகத்தில் 10 சதவீதம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் 10 சதவீதம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மாவட்டந்தோறும் டெங்கு காய்ச்சல் சம்பந்தமாக ஆய்வு செய்கிறேன். திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சையை தொடர்ந்து திருவண்ணாமலையில் ஆய்வு செய்துள்ளேன். நாளை காஞ்சீபுரத்தில் ஆய்வு செய்கிறேன்.

    திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் வரை நாள் ஒன்றுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 160 பேர் முதல் 170 பேர் வரை வந்துள்ளனர்.

    அவர்களில், நாள் ஒன்றுக்கு 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் தினமும் 99 பேர் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தமிழகத்தில் 10 சதவீதம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    படிப்படியாக டெங்கு காய்ச்சல் குறைந்து வருகிறது. டெங்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் டெங்கு காய்ச்சலுக்கு இறப்பே இருக்காது. அந்த அளவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள தட்டணுக்களை கணக்கிடும் கருவியை உடனே வாங்கி தரவேண்டும் என்று கலெக்டர் கோரிக்கை வைத்தார்.

    அதன்படி, ரூ.23 லட்சம் மதிப்பிலான தட்டணுக்களை கணக்கிடும் கருவி 48 மணி நேரத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து காய்ச்சல் வார்டுகளுக்கும் தட்டணுக்களை கணக்கிடும் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரத்த தட்டணுக்களை கணக்கிடும் கருவி மூலம் 1 நிமிடத்தில் காய்ச்சல் கண்டறியப்படும். திருவண்ணாமலையில் டெங்கு விழிப்புணர்வும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    டெங்கு தடுப்பு பணிகளில் வருவாய்த்துறையினரும் இணைந்துள்ளனர். கொசு உற்பத்தியை கண்டறிந்து அழிக்கின்றனர். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான ஊசி, மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவை வந்த உடனேயே வழங்கப்படும்.

    நிலவேம்பு குடிநீர், மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே பரிசோதனை செய்யப்பட்டு எந்த பாதிப்பும் இல்லை என்ற பிறகே, மக்களுக்கு வழங்கப்பட்டது.

    தற்போது, நிலவேம்பு குடிநீர் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×