search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தடையை மீறி போராட்டம்: விவசாயிகள் மீது போலீஸ் தடியடி
    X

    புதுவையில் தடையை மீறி போராட்டம்: விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

    கரும்பு நிலுவைத் தொகை வழங்கக்கோரி புதுவை லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
    திருக்கனூர்:

    புதுவை லிங்கா ரெட்டி பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு 2016-17-ம் ஆண்டில் ஆண்டுக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு முன்பண தொகையான ரூ.7 கோடி இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

    இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போனஸ், ஊக்க தொகை, கருணை தொகை வழங்க வேண்டும் என்றும் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட்டு அரசே ஏற்று தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரி புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகம் எதிரே டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதற்கு போலீசார் அனுமதி அளித்து இருந்த நிலையில் நேற்றிரவு திடீரென இந்த போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால், போலீசாரின் தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

    அதன்படி போராட்டம் நடத்த புதுவை மற்றும் தமிழக பகுதி கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் மற்றும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஏராளமானோர் இன்று காலை லிங்கா ரெட்டி பாளையம் பெட்ரோல் பங்க் எதிரே ஒன்று திரண்டனர்.

    பின்னர் அவர்கள் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடத்த சர்க்கரை ஆலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் பேரிக்காடு அமைத்து ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


    முதலில் போராட்டத்துக்கு அனுமதி அளித்து விட்டு பின்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். அப்போது திடீரென போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்த ஆலையை நோக்கி சென்றனர்.

    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் கூனிச்சம்பட்டு முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரும், சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினருமான ஞானசேகர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

    அப்போது ஏராளமான பெண்கள் போலீஸ் வேன் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. உள்பட கைது செய்த அனைவரையும் விடுவிக்க வேண்டும் என கோரி கோ‌ஷம் எழுப்பினர். எனினும் போலீசார் பெண்களை அப்புறப்படுத்தி விட்டு கைது செய்தவர்களை வேனில் அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே பத்துக் கண்ணு சந்திப்பில் கைது செய்யப்பட்ட டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. உள்பட அனைவரும் போலீஸ் வேனில் இருந்து கீழே இறங்கி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது புதுவை காங்கிரஸ் அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் அங்கு இருந்தார்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்தி வரும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.விடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×