search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை
    X

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

    தேனி- திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தேனி:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வந்ததால் விவசாயம் முழுவதுமாக முடங்கி போனது. குடிநீருக்காக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணை முற்றிலும் வறண்டு பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டனர்.

    முல்லைபெரியாறு மற்றும் வைகை அணை நீர்மட்டமும் வேகமாக சரிந்து வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக 2 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று பகல் பொழுதில் கடும் வெயில் சுட்டெரித்த போதிலும் மதிய நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக தொடங்கி பின்பு பலத்த மழையாக சுமார் 3 மணி நேரம் பெய்தது. விடிய விடிய சாரல் மழையாக நீடித்தது. இதனால் பூமி குளிர்ந்தது.

    திண்டுக்கல் நகர் பகுதி, நத்தம், அய்யலூர், வடமதுரை, பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தது. கொடைக்கானலில் ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் நகர் பகுதி, பெரியகுளம், ஆண்டிபட்டி, ஏத்தகோவில், க.விலக்கு, வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்து பெய்தால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பெரியகுளத்தில் மழையால் பஸ்களில் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டதால் பயணிகள் சிரமமடைந்தனர். பல நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×