search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலியானதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலியானதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலியானதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பெரம்பூர்:

    சென்னை புளியந்தோப்பு ராஜாதோட்டம் தெருவை சேர்ந்தவர் தணிகைராஜ். இவரது மகன் சச்சின் (வயது 9). 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 1-ந்தேதி சச்சினுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் அவனுக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    உடனடியாக சச்சினை கடந்த 6-ந்தேதி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் மர்ம காய்ச்சல் என்று கூறி சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சச்சின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவனது இறப்பு சான்றிதழில் இறந்தததற்கான காரணம் டெங்கு காய்ச்சல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் சரியான சிகிச்சை அளிக்காததே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து புளியந்தோப்பு, கன்னிகாபுரம், தாஸ்நகர், வெங்கடேசபுரம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஷேக்பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×