search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்து மேலும் 10 பேர் அனுமதி
    X

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்து மேலும் 10 பேர் அனுமதி

    நெல்லை அரசு மருத்துவமனையில் ஆலங்குளம் பகுதியில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    நெல்லை:

    ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இப்பகுதி சுற்றுப்பகுதி கிராமங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர் அப்பகுதி தனியார் மருத்துவமனைகளிலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் சங்கரன் கோவில், கடையநல்லூர், கடையம், பாவூர்சத்திரம் பகுதியிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

    காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில் சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பட்டதாரி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் நந்தவனகிணறு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் மரிய ரோஸ்லின்(வயது25). எம்.சி.ஏ பட்டதாரியான இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மரிய ரோஸ்லின் நேற்று பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவமனையில் ஆலங்குளம் பகுதியில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல மற்ற பகுதிகளில் இருந்தும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு முன்பு போல பிரத்யேக கவனம் எடுத்து சிகிச்சை அளிக்கவேண்டும், மேலும் சிறப்பு வார்டில் கூடுதல் பணியாளர்கள், டாக்டர்கள் நியமித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் சமீப காலமாக டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக ஆலங்குளம் பகுதியில் சுகாதார துறை சார்பாக கொசு ஒழிப்பு பணியையும் தீவிரப்படுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×