search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை அரசு மருத்துவமனை"

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சுரண்டை சிறுமி ஓவியம் வரைவதிலும், பாடங்களை படிப்பதிலும் காட்டும் ஆர்வம் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோரை வியப்படைய செய்துள்ளது. #SurandaiGirl
    சுரண்டை:

    நமது வாழ்நாளில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பலருக்கு பலவிதமான நோய்கள் எளிதாக தாக்கிவிடுகிறது.

    ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு வரக்கூடிய சில ஆபத்தான நோய்கள் குழந்தைகளுக்கே வந்து விடுகிறது. மேலும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்க முடியாத ஆபத்தான அறுவை சிகிச்சைகளை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.

    அப்படி பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஓடி விளையாட வேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே என வேதனையடைகிறார்கள். குழந்தைகளுக்கும் அது பெரிய அவதியாகத்தான் இருக்கும். தெருவில் ஓடியாடி விளையாடிவிட்டு, நோய் அவதியால் ஆஸ்பத்திரியில் முடங்கி கிடப்பது மிகப்பெரிய கஷ்டம் தான்.

    ஆனால் தலையில் வந்த கட்டியால் அறுவைசிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி, அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகிறார்.

    சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவரது மனைவி குருவம்மாள். இவர்களது மகள் கார்த்திகா. 11வயது சிறுமியான இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    ஓவியம் வரைவதிலும், வண்ணம் தீட்டுவதிலும் திறமைமிக்கவராக விளங்கிவந்த சிறுமி கார்த்திகா, தலைவலியால் மிகவும் அவதிப்பட்டாள். இதையடுத்து அவளை நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் காண்பித்தனர். அவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமியின் தலையில் ஒரு கட்டி இருப்பது தெரியவந்தது.

    அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து கார்த்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுமிக்கு அறுவைசிகிச்சை நடக்கும் நாள் இன்றும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவள் கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

    சிறுமி வரைந்துள்ள ஓவியங்களை படங்களில் காணலாம்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும், தோழிகளுடன் விளையாட முடியவில்லை என்றும் சிறுமி கார்த்திகாவுக்கு வருத்தம் இருந்துள்ளது. அவள் தான் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து தனக்கு பிடித்தமான ஓவியங்களை வரைந்து வருகிறார். மேலும் தனது பாட புத்தகங்களையும் படித்து வருகிறாள்.

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி ஓவியம் வரைவதிலும், பாடங்களை படிப்பதிலும் காட்டும் ஆர்வம் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை வியப்படைய செய்துள்ளது.  #SurandaiGirl
    பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் கள்ளக்காதல் ஜோடி ஓடும் பஸ்சில் உயிரை மாய்த்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடலை மிட்டாய் கடையில் பணி புரிந்து வருகிறார். பணியின் காரணமாக தூத்துக்குடியில் தங்கியிருந்தாலும் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இவரது தம்பி நயினார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இலக்கியா (21). இவர்களுக்கு ரஞ்சனா(2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கும், இலக்கியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக கணவன், மனைவி போல் பழகி வந்துள்ளனர்.

    இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் உறவினர்கள் கண்டித்தனர். இனிமேல் இருவரும் சந்திக்கக் கூடாது, பழக கூடாது என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் அவர்களால் காதலை கைவிட முடியாமல் தவித்தனர். உறவினர்களுக்கு தெரியாமல் சந்திப்பை தொடர்ந்தனர்.

    கடந்த 5-ந்தேதி இலக்கியா தனது குழந்தை ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு, தீபாவளிக்கு உடன்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நயினார் தனது மாமனார் இசக்கிமுத்து விடம் விசாரித்தபோது, இலக்கியா அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    அதே வேளையில் நயினாரின் அண்ணன் மணிகண்டனையும் காணவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி குலசேகரன்பட்டினம் போலீசில் நயினார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இலக்கியா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு மணிகண்டனுடன் சென்றது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதை அறிந்த கள்ளக்காதல் ஜோடியினர் போலீசார் தங்களை பிரித்துவிடுவார்களோ என்று பயந்தனர். வாழ்க்கையில்தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது இணைவோம் என்று நினைத்த அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர்.

    நேற்று அவர்கள் இருவரும் குழந்தையுடன் நெல்லை வந்தனர். நெல்லை பஸ் நிலையம் அருகே வைத்து மணிகண்டனும், இலக்கியாவும் வி‌ஷத்தை குடித்தனர். பின்பு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று உள்ளனர். அப்போது அவர்கள் பஸ்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சக பயணிகள் இருவரும் தூங்குவதாக நினைத்தனர்.

    வெகுநேரமாக அவர்கள் எழுந்திருக்கவில்லை. குழந்தை ரஞ்சனா மட்டும் அழுதுகொண்டிருந்தாள். சந்தேகம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து மூலக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டன், இலக்கியா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். #Swineflu
    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பல பகுதிகளில் பன்றி காயச்சல் பாதிப்பு இருந்தது. சுகாதார துறை நடவடிக்கையை தொடர்ந்து இந்த காய்ச்சல் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் நெல்லையில் அரசு டாக்டர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாளை ரகுமத் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கல்யாண்குமார். இவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 4 நாட்களாக தீராத காய்ச்சலும், இருமலும் இருந்துள்ளது.



    இதையடுத்து சந்தேகமடைந்த அவர் ரத்த பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் தலைமையிலான டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

    மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து டீன் கண்ணன் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உரிய சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார். அதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் சோதனை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்பட்டது இல்லை. இப்போது தான் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பாளை ரகுமத் நகரில் வேறு யாருக்கேனும் பன்றிக் காய்ச்சல் உள்ளதா? எனவும் ஆய்வு நடத்தி வருகின்றனர். #Swineflu

    ×