search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி இல்லாமல் பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி பெற 2 ஆண்டு கெடு
    X

    தகுதி இல்லாமல் பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி பெற 2 ஆண்டு கெடு

    பெரும்பாலான தனியார் பள்ளிகள் தகுதி இல்லாத ஆசிரியர்களை பணியில் நியமித்திருப்பதை மத்திய அரசு வரன்முறைபடுத்த முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    இலவச கல்வி உரிமை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு வழி வகுக்கும் இந்த சட்டம் ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

    ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களால் தான் மாணவர்களுக்கு முறையான கல்வியை கொடுக்க முடியும். கற்பித்தல் திறன், ஊக்குவித்தல், பயிற்று வித்தல் போன்றவை பயிற்சி பெற்ற தகுதி படைத்த ஆசிரியர்கள் மட்டுமே செய்ய முடியும்.

    பட்டப்படிப்புகளை படித்துவிட்டு பணியாற்றும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியாது. இச்சட்டம் வலியுறுத்துவது நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் பட்டய பயிற்சி (டி.டி.கி.டி)படித்திருக்க வேண்டும். இந்த தகுதி உள்ள ஆசிரியர்கள் தான் தமிழகத்தில் அரசு மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் நியமிக்க வேண்டும்.

    ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் பி.ஏ., பி.எஸ்.சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புகள் படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள்.நாடுமுழுவதும் சுமார் 11லட்சம் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி இல்லாமல் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    குறைந்த ஊதியத்தில் ஏதோ ஒரு வேலை என்ற அடிப்படையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் தகுதி இல்லாத ஆசிரியர்களை பணியில் நியமித்திருப்பதை மத்திய அரசு வரன்முறை படுத்த முடிவு செய்துள்ளது.

    அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பயிற்சி பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றும் தகுதி இல்லாதவர்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றாமல் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.) மூலமாக இவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சியை அளிக்கிறது. 2 ஆண்டு கால இந்த பயிற்சி முடிந்த பிறகு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றிதழுக்கு சமமானது.

    தனியார் பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவும், டி.வி. வழியாகவும் இந்த பயிற்சியை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சுயம்பிரபா’ என்ற சேனல் இதற்காக அக்டோபர் 3-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. பாடத்திட்டங்கள், பயிற்சிகள் போன்றவை டி.வி. வழியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் suyam,gov.in ஆன் லைன் வெப்சைட் வழியாகவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தவிர விடுமுறை நாட்களில் தொடர்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. வேலை செய்து கொண்டே இப்பயிற்சியை முடிக்க முடியும்.

    தனியார் பள்ளிகளில் தகுதியில்லாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி பெற 2 ஆண்டு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 2019 ஏப்ரல் 1-ந்தேதிக்குள் இந்த பயிற்சியை நிறைவு செய்யா விட்டால் தனியார் பள்ளிகளில் பணியாற்ற முடியாது.

    இதுகுறித்து தேசிய திறந்தநிலை கல்வி நிறுவன மண்டல இயக்குனர் பி.ரவி கூறியதாவது:-

    தனியார் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகள் (1 முதல் 5 வகுப்பு) எடுக்கும் ஆசிரியர்களுக்கு இந்த சான்றிதழ் வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 10 லட்சம் ஆசிரியர்கள் இந்த தகுதி பயிற்சியை பெற விண்ணப்பித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் இதுவரையில் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்கு முதல் வருடத்திற்கு ரூ.4,500-ம், 2-வது வருடத்திற்கு ரூ.6,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதியான ஆசிரியர்கள் மூலம் தான் கல்வி கற்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    Next Story
    ×