search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் கரூர் ராம்நகரில் உள்ள தியாகராஜன் வீட்டை படத்தில் காணலாம்.
    X
    வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் கரூர் ராம்நகரில் உள்ள தியாகராஜன் வீட்டை படத்தில் காணலாம்.

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்கள் நிறுவனங்களில் 3-வது நாளாக சோதனை

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் வீட்டில் இரவு முழுவதும் தங்கியிருந்து சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க. (அம்மா) அணியில் டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் மனு கொடுத்த 18 பேரில் இவரும் ஒருவர். இதையடுத்து சபாநாயகர் தனபால், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தார்.

    இந்நிலையில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக ரூ. 4½ கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்று 3-வது நாளாகவும் தொடர்கிறது.

    கரூர் ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், ராயனூர், ராம்நகர் பகுதிகளில் உள்ள செந்தில்பாலாஜியின் நண்பர்களான சாமிநாதனின் ஜவுளி நிறுவனம், நவ்ரங்க் சுப்பிரமணியத்தின் நிதிநிறுவனம், தியாகராஜனின் வீடு, எம்.சி.எஸ். சங்கரின் அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்தது. இதில் ராம்நகரில் உள்ள தியாகராஜனின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் இரவு முழுவதும் விடிய விடிய அங்கேயே தங்கி இருந்து சோதனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். மீண்டும் தியாகராஜனின் வீட்டில் சோதனை நடத்தலாம் என கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் மட்டும் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள வருமான வரித்துறையினர் அலுவலகத்தில் வைத்துள்ளனர். இந்த சோதனையில் வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் 20 குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கரூர், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அதிகாரிகள் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அவரும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
    Next Story
    ×