search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைப்பகுதியில் கன மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 22 அடி உயர்ந்தது
    X

    மலைப்பகுதியில் கன மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 22 அடி உயர்ந்தது

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கன மழையினால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 22 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கன மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைப்பகுதியில் பெய்த கன மழையினால் பாணதீர்த்தம், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    கடையநல்லூர் மலையில் உள்ள கருப்பாநதி அணைப் பகுதியிலும் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள கொப்பருவியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் பெரியாற்றுப்படுகை, கல்லாற்று படுகையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு 50 கன அடி தண்ணீர் வருகிறது. குளங்களுக்கும் தண்ணீர் வரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 78.60 அடியாக இருந்தது. நேற்று பெய்த மழையினால் இன்று இந்த அணை நீர்மட்டம் மேலும் 5.20 அடி உயர்ந்தது. இதனால் நீர்மட்டம் 83.80 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2804 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 304.75 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 66.27 அடியாக இருந்தது.

    தொடர்ந்து பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 22.24 அடி உயர்ந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் 88.91 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1913.43 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

    இதேபோல நேற்று 40.60 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 43 அடியாகவும், 61.80 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் மேலும் 2.7 அடி உயர்ந்து 64.50 அடியாகவும், 65.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 3.25 அடி உயர்ந்து 68.75 அடியாகவும், 51.38 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் மேலும் 3.08 அடி உயர்ந்து 54.46 அடியாகவும், 21.50 அடியாக இருந்த கொடுமுடியாறு அணை நீர்மட்டம் மேலும் 5.5 அடி உயர்ந்து 27 அடியாகவும், 90 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 95 அடியாகவும் உயர்ந்துள்ளன.

    குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பிவிட்டது. இதன் உபரி நீர் மதகின் வழியே வெளியேறி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணையில் 61 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்)வருமாறு:

    பாபநாசம்61, குண்டாறு52, அடவிநயினார்35, செங்கோட்டை27, சேர்வலாறு23, கொடுமுடியாறு 20, தென்காசி15.2, கருப்பாநதி14, கடனா நதி12, அம்பை12, ஆய்க்குடி11, ராமநதி10, நாங்குநேரி 8, சேரன்மகாதேவி6, சங்கரன்கோவில்6, சிவகிரி6, பாளை4, நம்பியாறு2, நெல்லை1.
    Next Story
    ×