search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 2 நாட்கள் கனமழை: ஏரி, குளம், கிணறுகளில் நீர்மட்டம் உயருகிறது
    X

    சென்னையில் 2 நாட்கள் கனமழை: ஏரி, குளம், கிணறுகளில் நீர்மட்டம் உயருகிறது

    சென்னையில் கடந்த 2 நாளாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் சென்னை நகர மக்கள் மட்டுமின்றி புறநகர் பகுதி குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
    சென்னை:

    சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக கொளுத்திய கோடை வெயிலின் தாக்கம் இதுவரையில் குறையாமல் இருந்தது. குடிநீர் பஞ்சம் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    குடிநீருக்காக அதிகாலையிலேயே குடங்களை தூக்கிக் கொண்டு செல்லும் பரிதாப நிலை பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது. ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

    குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கூட சென்னையில் குடிநீருக்கு மக்கள் அலைந்து திரிகிறார்கள்.

    ஆழ்துளை கிணறுகள் வற்றி வறண்டு விட்டதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் பல இடங்களில் மீண்டும் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய எல்லா ஏரிகளிலும் தண்ணீர் இல்லாமல் பருவமழை மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் இடைவிடாது பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

    அதேபோல நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்தது. பின்னர் காற்றின் வேகம் குறைந்ததால் பலத்த மழை கொட்டியது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழை 9 மணியளவில் நின்றது.

    பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும் மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    தாழ்வான சில இடங்களில் வீடுகளில் தண்ணீரும் புகுந்தது. குறைந்த நேரம் மழை பெய்தாலும் கூட மழையின் வேகம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் தெருக்களிலும் சாலைகளிலும் குளம்போல் தேங்கியது.

    2 நாள் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் சென்னை நகர மக்கள் மட்டுமின்றி புறநகர் பகுதி குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. வற்றி வறண்டு கிடந்த கிணறுகள் நிரம்பி வருகின்றன.

    சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய புழல் ஏரியின் கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடியாகும். தண்ணீர் இல்லாமல் வற்றி கிடந்த புழல் ஏரி 2 நாளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    சோழவரம், செங்குன்றம் பகுதியில் பெய்த பலத்த மழையால் நேற்று முன்தினம் 17 மில்லியன் கனஅடி நீர் வந்தது. நேற்று இரவு பெய்த மழையால் 19 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 28 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல சோழவரம் ஏரியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சேலத்தில் 16 செ.மீ., நாகப்பட்டினத்தில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வால்பாறையில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்காடு, காடையாம்பட்டி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், சேலம் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஏற்காட்டில் அதிக பட்சமாக 30.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    ஈரோடு, கொடுமுடி, கோபி, அந்தியூர் சுற்றுப்புற பகுதியிலும் நேற்று இரவு மழை பெய்தது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம்தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×