search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்
    X

    தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்

    சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    அதை தொடர்ந்து எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராயநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், வேளச்சேரி உள்பட பகுதிகளிலும், புறநகரிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    மழை காரணமாக பள்ளி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் நனைந்தபடியே சென்றனர். ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் மழை காரணமாக மரம் ஒன்று விழுந்தது. இதனால் அங்குள்ள தேவாலயத்தின் தடுப்பு சுவர் உடைத்து சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. சுமார் 2 மணி நேரம் பெய்த மழை காரணமாக சென்னையில் நேற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காணப்பட்டது.

    மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (வியாழக் கிழமை) அநேக இடங்களில் மழை பெய்ய உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஒரு வாரம் வரை மழை நீடிக்கும்.

    இவ்வாறு வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    செங்கம் 9 செ.மீ., ஒகேனக்கல், ஊத்தங்கரை தலா 8 செ.மீ., பழனி, ஸ்ரீபெரும்புதூர், பெண்ணாகரம், உசிலம்பட்டி தலா 5 செ.மீ., குடியாத்தம், திருச்சி, துறையூர், சூலகிரி தலா 4 செ.மீ., ஆம்பூர், மரக்காணம், தளி, வத்திராயிருப்பு, கொடுமுடி, உத்திரமேரூர், ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, பெரம்பலூர், மயிலம் தலா 3 செ.மீ., போளூர், பையூர், சோழிங்கர், வால்பாறை, காட்டுக்குப்பம், வெம்பாவூர், இலுப்பூர், சோழவந்தான், துவாக்குடி, ஊட்டி, பள்ளிப்பட்டு, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் தவிர பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் வறண்டுவிட்டன. தற்போது மழை பெய்ய தொடங்கியதால் ஏரிகளில் போதிய அளவு நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஏரிகளின் நீர்மட்டமும் உயரவில்லை என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×