search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூர் தீ விபத்து: மேலும் 2 பேர் பலி
    X

    கொடுங்கையூர் தீ விபத்து: மேலும் 2 பேர் பலி

    கொடுங்கையூர் தீ விபத்தில் படுகாயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிர் இழந்தனர்.
    சென்னை:

    கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள பேக்கரி கடையில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    கடையின் வெளிப்பகுதியில் தீயை அணைத்த வீரர்கள் ‌ஷட்டரை திறந்து உள்ளே தீயை அணைக்க முயன்ற போது பேக்கரியில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள், வேடிக்கை பார்த்த பொதுமக்கள் என 47 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தீக்காயம் அடைந்தவர்கள் கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தீயணைப்பு வீரர் ஏகராஜ் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தனர். 12 மருத்துவர்கள் 35 நர்சுகள் அடங்கிய சிறப்பு குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    கொடுங்கையூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த பரந்தாமன் (67) நேற்றிரவு இறந்தார். இவர் துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

    அபிமன்யூ (40) என்பவர் இன்று அதிகாலை இறந்தார். கண்ணதாசன் நகரை சேர்ந்த இவர் கார் டிரைவராக இருந்தார். கொடுங்கையூர் தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவனை டீன் வசந்தா மணி தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிகிச்சை குறித்து டீன் வசந்தா மணி கூறியதாவது:-

    தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரந்தாமன் இறந்தார். அவருக்கு ஏற்கனவே 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்தது. அபிமன்யூவிற்கு 50 சதவீத தீக்காயம் இருந்தன. ஆனால் தலையில் அடிப்பட்டு இருந்ததால் திடீரென உயிர் இழப்பிற்கு ஆளானார்.

    இங்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேரில் 2 பேர் உயிர் இழந்தனர். தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2பேர் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையும் மோசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×