search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 12-ந்தேதி ஆர்ப்பாட்டம்
    X

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 12-ந்தேதி ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 12-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    சென்னை:

    ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கி.வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்து தமிழக அரசு 2 மசோதாக்களை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உடனே மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஜனாதிபதிக்கு ஒரு கோடி மாணவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் அட்டை மற்றும் மின்னஞ்சல் அனுப்ப இருக்கிறார்கள்.

    நீட் தேர்வில் மாநில அரசு இரட்டை வேடம் காட்டுகிறது. பாடத்திட்டத்துக்கு ஏற்றாற்போல் தான் தேர்வு நடத்த வேண்டுமே தவிர, தேர்வுக்காக பாடத்திட்டத்தை மாற்றுவது முரண்பாடான செயல். மாநில அரசு இந்த போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×