search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரே சிலைகளை விற்பனை செய்ததாக வழக்கு: ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேரில் ஆஜராக உத்தரவு
    X

    போலீசாரே சிலைகளை விற்பனை செய்ததாக வழக்கு: ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேரில் ஆஜராக உத்தரவு

    போலீசாரே சிலைகளை விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வருகிற 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவர், பல நூற்றாண்டுகளுக்கு பழமையான சிவன்-பார்வதி சிலை, ஒரு அம்மன் சிலை ஆகிய 2 சிலைகளை வெளி நாட்டிற்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காதர்பாஷா, சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 5 பேர் அவனை பிடித்து விசாரித்து அந்த சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அந்த சிலையை சென்னையில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

    இதன்பின்னர், மதுரையில் ஒரு புகைப்பட கலைஞர் பழமையான சிலைகளை புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாக கூறி இதே போலீஸ் படை அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவரும், ஆரோக்கியராஜின் பெயரை சொன்னதால், மீண்டும் ஆரோக்கியராஜை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர்.


    அப்போது, மேலும் 6 சிலைகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த சிலைகளை பறிமுதல் செய்தது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த தகவல் எல்லாம் மர்ம நபர் கடிதமாக எழுதி, என்னுடைய காரின் முன் கண்ணாடியில் உள்ள (மழை நீரை தள்ளிவிடும்) வைப்பரில் வைத்து சென்றுள்ளார்.

    இதையடுத்து நானும் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினேன். அப்போது, இந்த தகவல் எல்லாம் உண்மை என்று தெரியவந்தது. தற்போது சிலைகளை சட்ட விரோதமாக பறிமுதல் செய்து விற்பனை செய்த இன்ஸ்பெக்டர் காதர்பாஷா துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். எனவே இந்த சிலை விற்பனை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சிலை கடத்தல் சம்பவத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் நேற்று கைது செய்துள்ளதாக மனுதாரர் கூறினார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வருகிற 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×