search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களுக்காக, நான் செயல்படுவதை நாராயணசாமி விரும்பவில்லை: கிரண்பேடி குற்றச்சாட்டு
    X

    மக்களுக்காக, நான் செயல்படுவதை நாராயணசாமி விரும்பவில்லை: கிரண்பேடி குற்றச்சாட்டு

    நீதி கிடைக்காமல் கண்ணீர் வடிக்கும் மக்களுக்காக, நான் செயல்படுவதை நாராயணசாமி விரும்பவில்லை என்று கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக கவர்னர் தலையிட்டதால், அதற்கு நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கவர்னர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளம் ஒன்றில் கவர்னர் கிரண்பேடி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நான் ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டுமா? அல்லது பொறுப்புள்ள நிர்வாகியாக செயல்பட வேண்டுமா? இதில் முதல்- அமைச்சர் என்ன விரும்புகிறார்? இது தான் இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது.

    சில தவறுகள் நடக்கிறது. மக்கள் நீதி கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி இருக்க கவர்னர் எல்லா கோப்புகளிலும் எந்த விளக்கங்களும் கேட்காமல் அனுமதி கொடுக்க முடியுமா? மக்களின் நன்மைக்கு எதிராக நடப்பதை தடுக்க கூடாதா?

    எதையும் பார்க்க கூடாது, வெறும் பார்வையாளராக இருக்க வேண்டும், சும்மா பொழுதை போக்க வேண்டும், கவர்னர் மாளிகையில் உள்ள எல்லா வசதிகளையும் நான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இப்படித்தான் நான் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்களா?

    என்னை தனிமைப்படுத்த வேண்டும், மக்களை சந்திக்க கூடாது? அதிகாரிகளிடம் கேள்வி கேட்கக் கூடாது, எதிலும் தலையிடக்கூடாது, அவர் சொல்வதை மட்டும் நான் கேட்க வேண்டும், என நினைக்கிறார்கள். இதற்காக பல கடிதங்களை அவர் எனக்கு எழுதுகிறார்.

    நான் மத்திய அரசிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்று தரவேண்டும் என்று முதல்-அமைச்சர் விரும்புகிறார்? ஆனால் கிடைக்கிற பணத்தை முறையாக செலவிடவில்லை? சுற்றுலா போன்றவற்றில் உரிய வருமானம் ஈட்டவில்லை.

    புதுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவருக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நடைமுறையில் எதிலும் சிறப்பாக செயல்பாடுகள் இல்லை.



    முதல்-அமைச்சருக்கு என்ன பொறுப்பு உள்ளது, கவர்னருக்கு என பொறுப்பு உள்ளது என்பது பற்றி யூனியன் பிரதேச சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் முதல்- அமைச்சர் அதை படித்தாரா? அல்லது படிக்க வில்லையா? அல்லது படித்து விட்டு புறக்கணிக்கிறாரா?

    தற்போது புதுவையில் என்ன சூழ்நிலை நிலவுகிறது? என்பதை சந்திக்க அவர் விரும்பவில்லை? மக்கள் நீதி கிடைக்காமல் கண்ணீர் வடிக்கிறார்கள். மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுப்படி மாணவர்களுக்கு உரிய இடம் கிடைக்காமல் மாணவர்களும், பெற்றோர்களும் அழுகிறார்கள்.

    மக்கள் அழுவதை இங்கு யார் கேட்கிறார்கள்? கோர்ட்டும் இங்கிருந்து வெகுதூரத்தில் சென்னையில் உள்ளது.

    எனவே தான் மக்கள் கடைசி நம்பிக்கையாக கவர்னர் மாளிகையை நோக்கி வருகிறார்கள். எப்போதும் அவர்களுக்காக கவர்னர் மாளிகை திறந்து உள்ளது.

    புதுவையில் இப்போது நீதி, நேர்மை சிறந்த அரசாங்கம் தேவைப்படுகிறது.

    அதை மக்கள் எப்படி பெறுவார்கள்? யார் அவர்களுக்கு வழங்குவார்கள்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் சிலருக்காவது அவர்களுக்காக துடிக்கும் இதயம் வேண்டும். சுயநலம் இல்லாமல் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களுக்காக பணியாற்ற ஒருவர் வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.
    Next Story
    ×