search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்

    அக்னி நட்சத்திரம் விடை பெற்றதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.
    சென்னை:

    அக்னி நட்சத்திரம் விடை பெற்றதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

    அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 28-ந்தேதியோடு நிறைவடைந்தது. தொடர்ந்து, இனி வெயிலின் தாக்கம் குறைந்து, கோடைமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் நேற்று பகல் நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 100.4 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 104.9 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

    வெயிலின் தாக்கம் பகல் பொழுதில் இருந்து பிற்பகல் வரை கூடிக்கொண்டே வந்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நேற்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெப்பத்தின் அளவு ஒரே அடியாக குறையவும் தற்போது வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெற்கு அரபிக்கடல் பகுதியில் தற்போது ஈரப்பதம் மிகுந்த தென் மேற்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதால் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை நாளை (இன்று) தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

    அதேபோல் வங்ககடலின் வட கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள மோரா புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (இன்று) முற்பகல் வங்கதேச கடல் பகுதியில் கரையை கடக்க கூடும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    கடந்த 24 மணிநேர நிலவரப்படி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்தது. அதிகபட்சமாக அறந்தாங்கி மற்றும் தேவகோட்டையில் 2 சென்டி மீட்டர், காரைக்குடியில் 1 சென்டி மீட்டர் அளவு மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். வெயிலின் அளவு அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×