search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலியூர் நாகராஜன் தலைமையில் விவசாயிகளுக்கு அனுப்பிய சம்மனை கலெக்டரிடம் காண்பித்து முறையிட்ட விவசாயிகள்.
    X
    புலியூர் நாகராஜன் தலைமையில் விவசாயிகளுக்கு அனுப்பிய சம்மனை கலெக்டரிடம் காண்பித்து முறையிட்ட விவசாயிகள்.

    பயிர்க்கடனை செலுத்தாவிட்டால் வீடு- நிலம் பறிமுதல்: விவசாயிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ்

    பயிர்க்கடனை ஜூன் 16-ந்தேதிக்குள் வட்டியுடன் செலுத்தாவிட்டால் விளை நிலங்கள், வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என திருச்சி விவசாயிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி நோட்ஸ் அனுப்பியுள்ளது.
    திருச்சி:

    வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர்.

    தமிழக முதல்-அமைச்சர், மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். வருகிற மே மாதம் 25-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம் குழுமணி, மேக்குடி, கோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றிருந்தனர். ஆனால் அவர்களால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

    இதையடுத்து கடனை திரும்ப செலுத்தக்கோரி 6 விவசாயிகளுக்கு கோர்ட்டு மூலம் எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஜூன் 16-ந்தேதிக்குள் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தாவிட்டால் விளை நிலங்கள், வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    வறட்சி நிவாரணம், வங்கி கடன் ரத்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த நிலையில் 6 விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த கோரி எஸ்.பி.ஐ. வங்கி நிறுவனம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் சம்மனை பெற்றுக்கொண்ட விவசாயி பாலமுத்து என்பவர் கூறும் போது, நான் எஸ்.பி.ஐ. வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.2 லட்சம் பயிர்க்கடன் வாங்கினேன். ஆனால் தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று எஸ்.பி.ஐ. வங்கி கோர்ட்டு மூலம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஜூன் 16-ந்தேதிக்குள் செலுத்தாவிட்டால் விளை நிலங்கள், வீடுகளை பறிமுதல் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. வறட்சியின் காரணமாக எங்களால் எந்த பயிரும் விளைவிக்க முடியவில்லை. இதன் காரணமாக வங்கி கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது பற்றி அரசிடம் முறையிட்டதோடு, பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் கடனை செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் வங்கி அதிகாரிகள் எங்களை தரக்குறைவாக பேசுகின்றனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    த.மா.கா. மாநில விவசாய அணி செயலாளர் புலியூர் நாகராஜன் கூறும் போது, பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போதுதான் போராட்டத்தை நடத்தி உள்ளோம். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் கடனை திரும்ப செலுத்தக் கோரி விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மத்திய அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. வறட்சியால் தமிழக விவசாயிகள் 400 பேர் இறந்துள்ளனர். தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


    இந்த சூழ்நிலையில் வங்கி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கலெக்டரிடம் முறையிடப்படும் என்றார்.

    இந்த நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பியது குறித்து முறையிட்டதோடு, கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

    அவர்களுடன் சமரசம் பேசிய கலெக்டர், சம்மன் தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
    Next Story
    ×