search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டுப்புடவைகளை எப்படி பராமரிக்க வேண்டும்?
    X

    பட்டுப்புடவைகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

    பட்டுப்புடவையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல வருடங்கள் புதிது போல் இருக்கும். இன்று பட்டுப்புடவையை பராமரிக்கும் எளிய முறையை பார்க்கலாம்.
    பட்டுப்புடவைகளை வைப்பதற்கென்றே இப்போது பிரத்யேக பைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, ஒவ்வொரு புடவையையும் ஒரு பையில் போட்டு வைக்கலாம்.

    உடுத்துகிறீர்களோ, இல்லையோ... ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து காற்றோட்டமான இடத்தில் பிரித்துக் காய வைத்து மறுபடி எடுத்து மடித்து வைக்க வேண்டும். வெயிலில் உலர்த்தினால் புடவையின் பளபளப்பும், நிறமும் மங்கலாம்.

    பட்டுப்புடவைகளை அடிக்கடி வெளியே எடுத்து, மடிப்பை மாற்றி வைக்க வேண்டியது முக்கியம். ஒரே மடிப்பில் வைத்திருந்தால், அந்தப் பகுதி நைந்து, சீக்கிரமே கிழிந்து போக வாய்ப்புகள் அதிகம்.



    நிறைய பட்டுப்புடவை வைத்திருப்பவர்கள், ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைக்கக் கூடாது. புடவை கவரில் வைப்பது சிறந்தது. முடியாத பட்சத்தில் வெள்ளை நிற காட்டன் துணியில் தனித்தனியே சுற்றி வைக்கலாம்.பீரோ அலமாரியில் நேரடியாக புடவைகளை வைக்கக் கூடாது.

    சிலர் பட்டுப்புடவைகளில் பூச்சி வரக்கூடாது என்பதற்காக வேப்பிலைகளைப் போட்டு வைப்பது, மூலிகைகளைப் போட்டு வைப்பதெல்லாம் செய்வார்கள். அதெல்லாம் புடவையில் கறைகளை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.

    நாப்தலீன் உருண்டைகள் போடும் போதும் நேரடியாக புடவையின் மீது படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். புடவைகளைப் பூச்சி அரிக்காமலும், வாசனையாக வைத்திருக்கவும் பிரத்யேக துணி மருந்துகள் கிடைக்கின்றன. குட்டிக் குட்டி சாட்டின் பை வடிவில் கிடைக்கிற அவற்றை புடவை அலமாரிகளில் போட்டு வைக்கலாம்.

    Next Story
    ×