search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆறாதாரச் சக்கரத்தில் மூலாதாரமாய் கணபதி...
    X

    ஆறாதாரச் சக்கரத்தில் மூலாதாரமாய் கணபதி...

    கர்ம வினையை அகற்றுவதற்கு நாம் கணபதியை நம் உடம்பில் உள்ள மூலாதாரச்சக்கரத்தில் எப்படி தியானிப்பது என்பதை தெரிந்து கொண்டால் கணபதியின் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழலாம்.
    நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும். மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது. அதற்கு நாயகன் விநாயகர் ஆவார்.

    வினைகளுக்கு நாயகன் விநாயகன். மனிதனுடைய வெவ்வேறு வினைகளை வேரோடு அறுத்து மங்களத்தைக் கொடுப்பவர் விநாயகர் ஒருவரே.

    மனித உடல் ஓர் அற்புத இறை சக்தியை உள் அடக்கிய பெட்டகம். இந்த உடல் உள் உறுப்புக்களை இயக்குவது வெவ்வேறு சக்கரமாகும். முக்கியமாக ஆறு ஆதார சக்கரங்களை நம் முன்னோர் வழிவந்த சித்தர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர். இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது. அதற்கு தலைவர் கணபதி. இவர் பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

    உடம்பில் உள்ள முக்கியச் சக்கரங்கள்

    மூலாதாரம்      -  கணபதி
    சுவாதிஷ்டானம்  -  பிரம்மா, சரஸ்வதி
    மணிபூரகம்  -  மகாவிஷ்ணு, மகாலெஷ்மி
    அனாகதம்  -  சிவன், பார்வதி
    விசுக்தி  -  அர்த்தநாரீஸ்வரர்
    ஆக்ஞை  -  சதாசிவம்
    சிதாகாசம்  -  வெட்டவெளி

    யோகம் என்றால் இணைதல் என்று பொருள். மனம், உடல் ஆன்மாவுடன் லயமாவதே யோகம். இதற்கு நம் வினைகள் தடையாக உள்ளன.

    இந்த கர்ம வினையை அகற்றுவதற்கு நாம் கணபதியை நம் உடம்பில் உள்ள மூலாதாரச்சக்கரத்தில் எப்படி தியானிப்பது என்பதை தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் கணபதியின் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழலாம். செல்வம் செழிக்கும். ஆரோக்கியம் கைகூடும். புகழ் பெருகும். உடல், மன அமைதி கிடைக்கும்.



    இந்த சக்கரா தியானத்தில் கூட மற்ற சக்கரங்களில் தியானம் செய்ய நெறிமுறைகளோடு செய்ய வேண்டும். ஆனால் மூலாதாரத் தியானம் பயப்படாமல் செய்யலாம். எந்த பக்க விளைவும் கிடையாது. காரணம் இதில் நம்ம பிள்ளையார் அல்லவா அதிபதி!

    மூலாதார சக்கர தியானம்

    ஒரு விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம், அல்லது வஜ்ராசனம், அல்லது சாதாரணமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடிக் கொள்ளுங்கள். முதலில் தலை முதல் கால் வரை உடல் வெளித் தசையில் உங்கள் மனதை நிலை நிறுத்தி அதில் உள்ள டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணி ஒரு 5 நிமிடம் தளர்த்தவும். பின் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.

    பின் உங்கள் மனதை உங்கள் உடலில் உள்ள முதுகுத்தண்டின் கடைசிபகுதி உள் பகுதியில் மனதை நிறுத்தவும். இது மூலாதாரச் சக்கரமாகும். இதில் உங்களுக்குப் பிடித்த கணபதி உருவத்தை தியானிக்கவும். அல்லது பத்து நிமிடம் மனதிற்குள் ஜெபிக்கவும்.

    அப்பொழுது மலர்களினால் மானசீகமாக அர்ச்சனை செய்யவும். பின் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிட்டு மூலாதாரச் சக்கரத்தில் கணபதியின் முழு அருளைப் பெறுவதாக தியானிக்கவும்.

    பின் விநாயகா, நான் பல ஜென்மங்களில் செய்த தீவினைப் பதிவுகள் அங்கே உன்னிடத்தில் வாசனையாக உள்ளன. எல்லா தீவினைகளும் அழியட்டும். இந்த உடல்,உள்ளம், புனிதம் அடையட்டும். எண்ணம், சொல், செயல் மூன்றும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையை அருள்வாய் விநாயகா என்று பிரார்த்திக்கவும்.

    பின் மெதுவாக ஓம் சாந்தி என்று மூன்று முறைகள் கூறி தியானத்தை நிறைவு செய்து கண்களைத் திறந்து கொள்ளவும். இத்தியானத்தால் நம் ஊழ்வினைகள் அறுக்கப்படுகின்றது. உடல் உள் உறுப்புக்கள் நல்ல வலுவாக இயங்குகின்றது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையில் வாழலாம்.
    Next Story
    ×