search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன், அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
    X

    திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன், அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனி சோலைவாழியம்மன் கோவில், வண்டிப்பாளையம் சாலை ராஜயோக அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியுர் மார்க்கெட் காலனியில் சோலைவாழியம்மன் கோவில் உள்ளது. அதேபோல் வண்டிப்பாளையம் சாலை ஸ்டேட் பாங்க் காலனியின் பின்புறம் ராஜயோக அய்யனார் சாமிகோவில் உள்ளது. இந்த 2 கோவில்களுக்கான கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

    இதற்காக அய்யனார் கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. முதல் நாள் அன்று காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி மற்றும் லட்சுமிபூஜை, கோபூஜை, தனபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் 2-வது நாள் விழாவாக நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு நவக்கிரக பூஜை, ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை 6.30 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 3-வது நாள் விழாவான நேற்று காலை 8.30 மணிமுதல் விக்னேஷ்வரபூஜை, 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து மாலை 5.30 மணி முதல் சிறப்பு ஹோமங்களுடன் 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், நகரசபை முன்னாள் தலைவர் குமரன், துணை தலைவர் சேவல் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்களுடன் பக்தர்கள் மார்க்கெட் காலனியில் உள்ள சோலைவாழியம்மன் கோவில் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் சோலைவாழியம்மனுக்கும், தொடர்ந்து விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து, பக்தர்கள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்டேட்பாங்க் காலனிக்கு வந்தனர். அங்கு பூர்ணா, புஷ்கலா உடன் ராஜயோக அய்யனாருக்கும், வீரனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த கும்பாபிஷேக விழாவில் சங்கர் செட்டியார், பாண்டியன் செட்டியார், பாபு, சிவ வள்ளிவிலாஸ் உரிமையாளர் சரவணன், தொழில் அதிபர் ஆர்.பி.என். நாகராஜன், சந்தானகிருஷ்ணன், பாடலி அன் கோ மணிசெட்டியார், முன்னாள் கவுன்சிலர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், விஜயகுமார், பிரகாஷ், கோவிந்தன், ராஜதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×