search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் விசாக திருவிழா 10நாட்கள் சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது. அதாவது 29-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை வசந்த உற்சவமாகவும், 7-ந்தேதி ஒருநாள் விசாக திருவிழாவுமாக கொண்டாடப்படுகிறது. மேலும் 8-ந்தேதி மொட்டையரசு உற்சவம் கொண்டாடப்படுகிறது.

    திருவிழாவின் முதல் நாளான 29-ந்தேதி இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து கோவில் வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 6-ந்தேதி வரை தினமும் இரவு 7மணிக்கு சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக 7-ந்தேதி சண்முகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி மதுரை, அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மேலும் பறவை, இளநீர், புஷ்ப, பன்னீர் காவடிகள் உள்ளிட்ட வித விதமான காவடிகள் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.



    அன்று காலை முதல் மாலை வரை திருப்பரங்குன்றத்தில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விசாக திருவிழாவில் மட்டும் தான், சண்முகர் சன்னதியிலிருந்து, விசாக கொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானையுடன் சண்முகப்பெருமான் இடம் பெயர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    பொதுவாக திருப்பரங்குன்றம் கோவிலில், சன்னதியில் உள்ள முருகப்பெருமான் கரத்தில் உள்ள வேலுக்கு தான் பாலாபிஷேகம் நடைபெறும். ஆனால் விசாகத்திருவிழாவின் போது வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு காலை முதல் மாலை வரை தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலையில் தங்ககுதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி மொட்டையரசு திடலுக்கு செல்லுகிறார். அங்கு இரவு வரை தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் இரவு 10 மணிக்கு பூப்பல்லக்கில் சாமி புறப்பட்டு இருப்பிடம் சென்றடைகிறார்.
    Next Story
    ×