search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருதமலை முருகன் கோவில் - கோயம்புத்தூர்
    X

    மருதமலை முருகன் கோவில் - கோயம்புத்தூர்

    தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது.
    தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடருந்து நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்.

    கோயில் அமைப்பு :

    புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

    வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை. இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.



    மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

    ஆதிமூலஸ்தானம் :

    மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

    பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில் :

    இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.[2] உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.
    Next Story
    ×