

வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 4 இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.
கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, தி.மு.க.வையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.
என் வாழ்க்கையில் 2 பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய ம.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அ.தி.மு.க.வுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.
2017-ம் ஆண்டில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது 2-வது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.
வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் லட்சோப லட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிப்பிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது.
இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.
உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொது வாழ்வில் இருப்போரும், பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.