கொரோனா பாதித்த தகவலை மறைத்தால் கடும் நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதித்த தகவலை மறைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசும்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் தற்போது உள்ள 92,406 உள் நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும்.

இது தவிர, தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக கூடுதலாக படுக்கை வசதிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளிலும், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு படுக்கை வசதிகளை எற்படுத்தும் போது, தீவிர சிகிச்சை வசதிகளை உருவாக்குவதற்காக, 560 வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள், அரசு மருத்துவ மனைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 500 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ஏற்படுத்த தேவையான மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் உள்ளன.

தனியார் மருத்துவமனை நிர்வாகங்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு, தமிழகத்திலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளிலும், ஏற்கனவே இருக்கக் கூடிய படுக்கை வசதிகளில் 750 படுக்கை வசதிகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி படுக்கை வசதிகளாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் முழு மனதோடு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை தர முன்வந்துள்ளன.

தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939ன் விதி 41, 43, 44-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், அதற்கான அறிகுறிகள் தென்பட்டு, வேலை செய்யும் இடத்திலோ, விடுதியிலோ, வீட்டிலோ இருந்தால், அவரைப் பற்றிய தகவல்களை அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அல்லது 24 மணி நேர மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் எற்கனவே அறிவிக்கப்பட்ட தொடர்பு எண்ணிலும் (04429510500, 29510400 மற்றும் கைபேசி எண்.94443 40496, 8754448477 மற்றும் இலவச சேவை எண்.1800 120 555550) ஆகிய மையங்களில் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேலாளர், விடுதி உரிமையாளர் மற்றும் குடும்பத் தலைவர் ஆகியோரின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக இன்று (23.3.2020) நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கீழ்கண்ட உத்தரவுகளை நான் வழங்கியுள்ளேன்.

ஏற்கனவே வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின் வீட்டுக் கதவில், “வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்ற விபரம் ஒட்ட வேண்டும்.

இந்த பட்டியலின் விபரம் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் களத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். இதனால், தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் பிற மக்கள் தொடர்பு கொள்வது தவிர்க்கப்படும்.

தனியாரிடம், கொரொனா வைரஸ் நோய் தொற்றை கண்டுபிடிக்கும் பரிசோதனை வசதியையும் பயன்படுத்தி, பரிசோதிக்க வேண்டிய இனங்களை உடனுக்குடன் பரிசோதித்து முடிக்க வேண்டும்.

வெளிநாடு பயணித்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து, சமுதாயத்தின் நலன் கருதி, சுய தனிமைப்படுத்துதல் மூலம், அவர்கள் யாரும் பொது மக்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சேவைக்கென, 25 சதவீதம் ஒதுக்க வேண்டும்.

சோதனைச் சாவடிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கண்காணித்து, தூய்மைப்படுத்த வேண்டும்.

காவல் துறை, இத்தகைய கடைகளில் மக்கள் அதிகம் கூடாதவாறு கண்காணிக்க வேண்டும்.

மக்கள் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து முழு மனதோடும், மன உறுதியோடும் தமிழ்நாடு அரசோடு தோளோடு தோள் நிற்க வேண்டும். அனைவரும், குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள், முழுமையான தகவல்களை சுகாதாரத் துறைக்கு அளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 100 ஆண்டுகளில் இவ்வுலகம் சந்தித்திடாத இத்தகைய பெரும் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டிய இத்தருணத்தில், மக்களின் தொடர் ஆதரவும், நடைமுறை ஒழுக்கமும், சுய தனிமைப்படுத்தலும் உடனடி தேவை என்பதை மீண்டும் ஒருமுறை அன்புடன் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com