அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை புதுப்பித்தல் 29-ந்தேதி தொடக்கம்

அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி 29.1.2018 திங்கட்கிழமை அன்று தொடங்கப்பட்டு, அனைத்து நாட்களிலும் தலைமைக் கழகத்தில் வழங்கப்படுகிறது.
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை புதுப்பித்தல் 29-ந்தேதி தொடக்கம்
Published on

சென்னை:

அ.திமு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அமைப்புத் தேர்தல் 2018 உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் புதுப்பித்தலும், புதிய உறுப்பினர்களை சேர்த்தலும் கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும் எனவும்; ஒவ்வொரு கழக அமைப்புத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னால், உறுப்பினர்களை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் ஆகிய பணிகளை செய்து முடிக்க வேண்டும் எனவும் கழக சட்டவிதி உள்ளது.

இவைகளின் அடிப்படையில் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் நடைபெற உள்ளன.

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி 29.1.2018 திங்கட்கிழமை அன்று தொடங்கப்பட்டு, அனைத்து நாட்களிலும் தலைமைக் கழகத்தில் வழங்கப்படும்.

கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் சென்று, அதில் கேட்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் தமிழில் கொட்டை எழுத்துக்களில் தெளிவாக பூர்த்தி செய்து வழங்கினால் தான், அந்த விபரங்களை உறுப்பினர் உரிமைச் சீட்டில் பதிவு செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவம் மற்றும் உறுப்பினர் உரிமைச் சீட்டு பெறுவதற்கான கட்டணத் தொகை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவம் ( ஒரு படிவத்தில் 25 பேர் சேர்க்கலாம் ) 10 ரூபாய், பிற மாநிலங்களில் 5 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

உறுப்பினர் உரிமைச் சீட்டு (1 கார்டு) 10 ரூபாய் வெளி மாநிலங்களில் 5 ரூபாய் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தலைமைக் கழகத்தில் பெறப்பட்ட பின்பு, அப்படிவங்களில் உள்ள உறுப்பினர்களின் விபரங்களை அதற்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளில் பதிவு செய்து வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள்.

கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தங்களுக்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் சென்று தங்கள் பகுதியில் ஏற்கெனவே கழக உறுப்பினர்களாக இருக்கும் கழக உடன்பிறப்புகளின் பதிவை புதுப்பிக்கும் பணியிலும், புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்கும் பணியிலும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கழகத்திற்கு மேலும் வலுசேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com