search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க.விற்கு வாக்களித்த பெண் படுகொலை என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்பிய 3 பேர் மீது வழக்கு
    X

    பா.ஜ.க.விற்கு வாக்களித்த பெண் படுகொலை என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்பிய 3 பேர் மீது வழக்கு

    • 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலைமணி. இவர் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டதாகவும், இதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு ஆஸ்பத்திரி கட்ட சங்கீதா முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெய்சங்கர்-சங்கீதா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா, கடந்த 19-ந் தேதி வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கலைமணி தரப்பினர், ஜெயப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்சங்கர், அவரது அண்ணன் ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் கலைமணி தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது மனைவி தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் உள்ளிட்ட 10 பேர் ஜெய்சங்கர் தரப்பினரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி துடிதுடித்து இறந்து போனார். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஜெயப்பிரியா, பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் அவரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கோமதி இறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இத்தகவலை சமூக வளைதலங்களில் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் "வட இந்தியர்" என்ற பெயரில் ரோஷன் என்பவர் இதனை வெளியிட்டது தெரியவந்தது. மேலும், இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரி பிரபாகரன் ஷேர் செய்ததும், பிரபல யூடியூபர் சண்முகம் இது குறித்து கருத்து வெளியிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், இது போன்று தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், கடலூர் மாவட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வடமாநில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×