search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு
    X
    வீடு

    வேலூர் தேர்தல் - 10 நாள் வீட்டு வாடகை ரூ.25 ஆயிரமாக உயர்வு

    வேலூர் தொகுதியில் பிரசாரம் நடந்துவரும் நிலையில் 10 நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வீட்டின் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    வெளி மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்காக வந்துள்ளவர்கள் தங்குவதற்கு தனியார் திருமண மண்டபம், விடுதி, ரெசிடென்சி ஆகியவை முன்பதிவு ஆகிவிட்டது. இதனால் அரசியல் கட்சியினர் தங்குவதற்கு வீடுகளை குறிவைக்கின்றனர். 10 நாள் வாடகைக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வீட்டின் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

    பிரசாரத்திற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் வீட்டின் உரிமையாளர் கேட்கும் பணத்தை கொடுத்து அரசியல் கட்சியினர் தங்குகின்றனர். பண்ணை வீடுகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது. அந்த வீடுகளை அரசியல் கட்சியினர் ஆர்வமாக கேட்கின்றனர். சிலர் அரசியல் பிரமுகர்களுக்கு வீடு கொடுக்க தயங்குகின்றனர். ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று வீடு கொடுக்க மறுக்கின்றனர்.

    ஆம்பூர் என்றாலே பிரியாணிக்கு பெயர் பெற்றது ஆகும். ஏற்கனவே ஆம்பூரில் பிரியாணி வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது வெளியூர் நபர்கள் ஆம்பூரில் வந்து குவிந்துள்ளதால் அனைத்து பிரியாணி ஓட்டல்களிலும் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. வியாபாரம் அதிகரித்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் மதிய உணவுக்காக ஆம்பூர் பிரியாணியை தேடி செல்கின்றனர்.

    Next Story
    ×