search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சின்னசாமி மைதானத்தில் சிக்சர் மழை- உலக சாதனை படைத்த ஆர்சிபி- ஐதராபாத் போட்டி
    X

    சின்னசாமி மைதானத்தில் சிக்சர் மழை- உலக சாதனை படைத்த ஆர்சிபி- ஐதராபாத் போட்டி

    • இரு அணிகளும் சேர்ந்து இப்போட்டியில் மொத்தம் 549 ரன்கள் அடித்தன.
    • இப்போடியில் ஐதராபாத் 22, பெங்களூரு 16 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்சர்கள் அடித்தனர்.

    ஐபிஎல் 2024 டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

    அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102 எடுத்தார்.அதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்து போராடினார்கள்.

    ஆனாலும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. இப்போட்டியில் 287 ரன்களை குவித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அவர்களின் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது ஐதராபாத்.

    அதே போல 262 ரன்கள் அடித்த பெங்களூரு ஐபிஎல் தொடரில் சேசிங்கில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் இரு அணிகளும் சேர்ந்து இப்போட்டியில் மொத்தம் 549 ரன்கள் அடித்தன. இதன் வாயிலாக அதிக ரன்கள் குவிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையை இப்போட்டி படைத்துள்ளது.

    அந்தப் பட்டியல்:

    1. 549 ரன்கள் : ஐதராபாத் - பெங்களூரு, பெங்களூரு, 2024*

    2. 523 ரன்கள் : ஐதராபாத் - மும்பை, ஐதராபாத் 2024

    3. 517 ரன்கள் : வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா, சென்சூரியன், 2023

    மேலும் இப்போடியில் ஐதராபாத் 22, பெங்களூரு 16 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்சர்கள் அடித்தனர். இதன் வாயிலாக அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையை இப்போட்டி சமன் செய்தது. இதற்கு முன் இதே சீசனில் ஹைதெராபாத் - மும்பை அணிகள் மோதிய போட்டியிலும் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டது.

    அத்துடன் இந்த போட்டியில் 2 அணிகளும் சேர்ந்து 43 பவுண்டரிகள் 38 சிக்சர்கள் என மொத்தமாக 81 பவுண்டரிகள் அடித்தன. இதன் வாயிலாக அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையையும் இப்போட்டி சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 சென்சூரியனில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியிலும் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×