தமிழ்நாடு

பிரதமர் மோடி மதரீதியாக பொதுமக்களை பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சிக்கிறார்- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

Published On 2024-05-16 06:51 GMT   |   Update On 2024-05-16 06:51 GMT
  • மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது.
  • இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, தமது பரப்புரையில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறிவருகிறார். தொடக்கத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையைப் போல் இருப்பதாக கூறினார். பிறகு, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெறுபவர்கள் என்றும் முத்திரை குத்தி, தனியாரிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அவதூறான கருத்துகளை கூறினார். ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று நேற்று பிரதமர் மோடி மும்பையில் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் சம உரிமையோடு, சம வாய்ப்போடு வாழ்வதற்கான உறுதிமொழிகளை தான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பிரதமர் மோடி தனது அவதூறு பிரசாரத்தின் மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார். அதில் அவர் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

பாராளுமன்ற தேர்தல் தொடங்கியதில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வந்த பிரதமர் மோடி, திடீரென அளித்த பேட்டியில் இந்து, முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். அப்படி அரசியல் செய்யும் நாளில் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவன் ஆகிவிடுவேன் என்று திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டு அந்தர் பல்டி அடித்திருக்கிறார். இதற்கு என்ன காரணமென்றால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராக தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதோடு, இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50 சதவிகித வரம்பை உயர்த்துவோம் என்று கூறியதற்கு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், மக்களவை தேர்தல் அரசியல் சூத்திரம் தலைகீழாக மாறி வருகிறது.

எனவே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி தனது பரப்புரையில் கூறியுள்ளதை போல, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்பதே இன்றைய தேர்தல் களம் கூறுகிற செய்தியாகும். இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News