search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்திஷ் ஆயுதக் குழுவுக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தவேண்டும்: அமெரிக்காவை வலியுறுத்தும் துருக்கி
    X

    குர்திஷ் ஆயுதக் குழுவுக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தவேண்டும்: அமெரிக்காவை வலியுறுத்தும் துருக்கி

    சிரியாவில் குர்திஷ் ஆயுதக் குழுவுக்கு அளிக்கும் ஆதரவை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று துருக்கி அரசு வலியுறுத்தி உள்ளது.
    அங்காரா:

    சிரியாவில்  செயல்பட்டு வரும் குர்திஷ் ஆயுதக் குழுவை (ஒய்.பி.ஜி) ஒழித்துக்கட்டும் ராணுவ நடவடிக்கையை துருக்கி தீவிரப்படுத்தி உள்ளது. கடும் விமான தாக்குதலைத் தொடர்ந்து, சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தரைப்படையும் தற்போது நுழைந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவியாக துருக்கி ஆதரவு கிளர்ச்சிக் குழுவினரும் (ப்ரீ சிரியன் ஆர்மி) இணைந்து முன்னேறி வருகின்றனர்.

    ‘ஆப்ரின் ஆபரேசன்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தாக்குதல் வெகு விரைவில் நிறைவடையும் என துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.

    இந்நிலையில், குர்திஷ் ஆயுதக் குழுவிற்கு அளித்து வரும் ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என துருக்கி வலியுறுத்தி உள்ளது. இதுபற்றி துருக்கி அதிபரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை துருக்கி படையினருக்கு எதிராக குர்திஷ் வீரர்கள் பயன்படுத்துவதாக கூறினார். 

    சிரியாவை ஒட்டி எங்கள் எல்லையில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தனது கட்டமைப்பை நிறுவும் செயலை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

    துருக்கியின் தெற்கு எல்லையை ஒட்டி சிரியாவின் அப்ரின் பிராந்தியம் உள்ளது. இங்கு வலுவாக காலூன்றி உள்ள குர்திஷ் ஆயுதக்குழு, சிரியாவின் வடக்குப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. இந்த குழுவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சண்டையிட்ட அமெரிக்க ஆதரவு படையில் குர்திஷ் ராணுவ குழு முக்கிய பங்கு வகித்தது.

    ஆனால், தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் குர்திஷ் ராணுவ குழுவுக்கு தொடர்பு உள்ளதாக கூறி அந்த குழுவினரை தீவிரவாதிகள் என துருக்கி கருதுகிறது. 

    தற்போது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான சண்டை முடிவடைந்துவிட்டதால் குர்திஷ் ஆயுதக் குழுவுடனான கூட்டணியை அமெரிக்கா முறித்துக்கொள்ள வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தி வருகிறது.

    துருக்கியின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள குர்திஷ் ஆயுதக் குழு, தங்களுக்கும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என கூறிவருவது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×