search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்தின் புதிய பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன்: தொழிலாளர் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி
    X

    நியூசிலாந்தின் புதிய பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன்: தொழிலாளர் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி

    நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. ஜெசிந்தா ஆண்டர்ன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
    வெலிங்டன்:

    நியூசிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பாராளுமன்றம் அமைய உள்ளது. ஆளும் தேசிய கட்சி 56 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 46 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிறிய கட்சியான நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி 9 இடங்களிலும், பசுமைக்கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க தேசிய கட்சியும், தொழிலாளர் கட்சியும் முயற்சி செய்தன. குறிப்பாக, 2008 முதல் ஆட்சியில் இருக்கும் தேசிய கட்சிக்கே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அந்த கட்சி நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சியின் ஆதரவை பெற்றால் மெஜாரிட்டி பெறும் சூழ்நிலை இருந்தது. தொழிலாளர் கட்சியோ, நியூசிலாந்து பர்ஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியின் ஆதரவை பெற வேண்டியிருந்தது.

    எனவே, தொங்கு பாராளுமன்றத்தில் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி உருவெடுத்தது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டமும் நடத்தப்பட்டது.

    இந்த ஆலோசனையின் முடிவில், ஜெசிந்தா ஆண்டர்னின் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக வின்ஸ்டன் பீட்டர்ஸ் அறிவித்தார். இதன்மூலம், 10 ஆண்டு காலமாக நீடித்த தேசிய கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 37 வயதே நிரம்பிய ஜெசிந்தா ஆண்டர்ன் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார். துணை பிரதமர் பதவியை வின்ஸ்டன் பீட்டர்சுக்கு வழங்க ஜெசிந்தா விரும்புகிறார். இதுபற்றி பரிசீலனை செய்துவருவதாக பீட்டர்ஸ் கூறியுள்ளார்.

    ஜெசிந்தா தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெறும் மந்திரிகள் குறித்த பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அவர்களின் இலாகா விவரம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.

    நியூசிலாந்து பர்ஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சி இணைந்த கூட்டணிக்கு பசுமைக் கட்சியின் ஆதரவும் தேவைப்படுகிறது. ஆனால், அந்த கட்சி குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். எனவே, இதுதெடார்பாக கட்சிகளிடையே அடுத்த வார துவக்கத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×