search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா முடிவில் மாற்றமா?
    X

    பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா முடிவில் மாற்றமா?

    பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    ‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார். அமெரிக்காவுக்கு சாதகமாக ஒப்பந்தத்தில் எந்த அம்சமும் இல்லை என்று விலகலுக்கு அவர் காரணம் சொன்னார்.

    இந்த நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரிகளை நேற்று முன்தினம் ஐரோப்பிய யூனியனின் பருவநிலை மாற்ற கமிஷனர் மிக்கேல் எரியாஸ் கேனட் மற்றும் தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர்.

    அதைத் தொடர்ந்து அவர்கள், “2015-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடரலாம் அல்லது இது தொடர்பான தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளலாம் என்பதை டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் குறிப்பால் உணர்த்தினர்” என்று தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவில் தற்போது மாற்றம் இல்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா ஹக்காபீ சாண்டர்ஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. நமது நாட்டுக்கு சாதகமான விதிமுறைகள் அதில் இல்லாத வரையில், அதில் இடம்பெறும் முடிவில் மாற்றம் இல்லை என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தி விட்டார்” என கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×