search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் அரசில் இருந்து விலகுவதாக கூட்டணி கட்சி தலைவர் அறிவிப்பு
    X

    பிரான்ஸ் அரசில் இருந்து விலகுவதாக கூட்டணி கட்சி தலைவர் அறிவிப்பு

    பிரான்ஸ் நாட்டில் இன்று அமையவுள்ள புதிய அரசில் இருந்து விலகுவதாக கூட்டணி கட்சி தலைவர் பிரான்கோயிஸ் பயிரோவ் அறிவித்துள்ளார்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தலைமயிலான கட்சியின் கூட்டணியில் உள்ள ‘மோடெம்’ சென்டர்-ரைட் என்ற கட்சியை சேர்ந்த சில்வியே கவுலார்ட் என்ற பெண் அந்நாட்டு ராணுவத்துறை மந்திரியாக இருந்தார்.

    பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆட்களை நியமனம் செய்வதிலும், ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு சொந்தமான நிதியில் கையாடல் செய்ததாகவும் முன்னர் ஊழலில் ஈடுபட்டதாக இவர்மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதனால், சில்வியே கவுலார்ட் தனது ராணுவ மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான சில்வியே கவுலார்ட், தன்மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் விரைவில் விசாரணையை சந்திக்க வேண்டியுள்ளதால் இனியும் ராணுவ மந்திரியாக நீடிப்பது சரியல்ல என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


    அவரது ராஜினாமாவை அடுத்து மந்திரிசபையில் மாற்றம் செய்ய அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தீர்மானித்துள்ளார். அநேகமாக, இன்று மாலை இந்த மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், பிரான்ஸ் அரசில் பிரதான கூட்டணி கட்சியாக இடம்பெற்றுள்ள ‘மோடெம்’ சென்டர்-ரைட் கட்சி தலைவர் பிரான்கோயிஸ் பயிரோவ் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அந்நாட்டு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பிரான்கோயிஸ் பயிரோவ் இன்று அறிவித்துள்ளார். தனது திடீர் முடிவுக்கான காரணத்தை விளக்குவதற்காக (உள்ளூர் நேரப்படி) இன்று மாலை ஐந்து மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×