search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட தங்க நகைகள்
    X
    கைப்பற்றப்பட்ட தங்க நகைகள்

    துபாய், பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.90½ லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

    துபாய் மற்றும் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.90½ லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அன்சர் (வயது 26) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை.

    ஆனால் அவர் போட்டோ பிரேம் போன்ற போர்டுகளை வைத்திருந்ததை கண்டனர். அவற்றை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள 829 கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அன்சரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதுபோல் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சுலைமான் (41) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது சட்டைகளில் வைக்கும் 258 பொத்தான்கள் இருந்தன. அவற்றை பரிசோதனை செய்தபோது தங்க பொத்தான்கள் என தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள 535 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக சுலைமான் கைது செய்யப்பட்டார்.

    மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திருவாரூரை சேர்ந்த உம்மாள் பஜிரா(69), அலிமா(47) ஆகியோரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 980 கிராம் எடை கொண்ட தங்க வளையல்கள், நெக்லஸ், செயின்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

    குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சிவய்யா கொகாந்தி (42) என்பவரின் உள்ளாடைகளில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 338 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரை சேர்ந்த பரகத்நிஷா(37) என்பவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 379 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.

    கடந்த 3 தினங்களாக நடத்திய சோதனையில் 6 பேரிடம் இருந்து ரூ.90 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 60 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் 2 பேரை கைது செய்தும் மற்றவர்களிடம் விசாரித்தும் வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×