search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி அருகே பிளஸ்-2 மாணவி மர்ம மரணம்: போலீசை கண்டித்து கிராம மக்கள் மறியல்
    X

    திருத்தணி அருகே பிளஸ்-2 மாணவி மர்ம மரணம்: போலீசை கண்டித்து கிராம மக்கள் மறியல்

    திரவுபதி அம்மன் கோவில் அருகே தண்டவாளத்தில் பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த காசிநாதபுரம் காலனியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள் தமிழரசி (வயது 17). திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 9-ந் தேதி பள்ளிக்கு சென்ற அவர் திருத்தணி, திரவுபதி அம்மன் கோவில் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது ஆடை அலங்கோலமான நிலையில் இருந்தது.

    இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவி தமிழரசியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் எந்த முடிவுக்கும் வராமல் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி மாணவியின் தந்தை டி.எஸ்.பி. பாலச்சந்திரனிடம் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் மாணவியின் மர்மசாவில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து இன்று காலை அப்பகுதி மக்கள் திருத்தணி - திருப்பதி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மாணவி ஏற்கனவே பள்ளியில் பெற்று இருந்த பரிசுகள் மற்றும் மதிப்பெண் பெற்ற விடைத்தாள்களை சாலையில் வைத்து அவரது பெற்றோர் கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் தாசில்தார் நரசிம்மன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து மாணவி தமிழரசியின் தந்தை வரதராஜ் கூறும்போது, ‘மகள் இறந்து 10 நாட்கள் ஆகியும் அவளது சாவுக்கு காரணமானவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தவில்லை.

    நாங்கள் சந்தேகப்படும் நபரிடம் கூட போலீசார் விசாரணை நடத்த மறுக்கின்றனர். முக்கிய பிரமுகர் ஒருவரது தூண்டுதலால் மகள் கொலையை மறைக்க முயலுகின்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். #tamilnews

    Next Story
    ×