search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயலில் பலியான விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கேட்டு குமரியில் நாளை முழு அடைப்பு
    X

    ஒக்கி புயலில் பலியான விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கேட்டு குமரியில் நாளை முழு அடைப்பு

    ஒக்கி புயலில் பலியான விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கேட்டு குமரியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியதில் ஏராளமான விவசாய பயிர்கள் சேதத்தை சந்தித்தது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களும் மாயமானார்கள். பலர் பலியானார்கள்.


    இறந்து போன மீனவர்களுக்கு நிவாரணம் கேட்டும், மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரியும் மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதனால் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்தநிலையில் புயலால் உயிரிழந்த விவசாயிகளுக்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

    தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பகல் 11 மணி அளவில் விவசாயிகள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து பா.ஜனதாவினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் திரளான பெண்களும், கைக்குழந்தையுடன் பங்கேற்றனர்.

    போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென பலத்த மழை பெய்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் கொட்டும் மழையிலும் சாலை மறியலை தொடர்ந்தனர். நடுரோட்டில் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்க்ரா அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கலெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அவர்கள் கூறியதால் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் அங்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


    தக்கலையில் மறியலில் ஈடுபட்டவர்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் சந்தித்து சமாதானப்படுத்திய காட்சி.

    விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். விவசாயிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு மாலை 4 மணி அளவில் தங்கள் மறியலை கைவிட்டனர். இதனால் 5 மணி நேரத்துக்கு பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது.

    இதுபற்றி பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இந்த புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே அவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், 13 நாளாக நாங்கள் போராட்டம் நடத்தியும் எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. கலெக்டரின் உறுதிமொழி படி இன்று மாலைக்குள் எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் நாளை குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.


    Next Story
    ×