search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலைக்கு செல்ல விடுப்பு தர மறுப்பு - ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு போலீஸ் ஏட்டு மாயம்
    X

    சபரிமலைக்கு செல்ல விடுப்பு தர மறுப்பு - ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு போலீஸ் ஏட்டு மாயம்

    சபரிமலைக்கு செல்ல விடுப்பு தர மறுக்கப்பட்டதால் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு ஏட்டு மாயமான சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் முத்துசாமி (வயது 45).

    இவர் ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை போட்டு செல்வது வழக்கம். இந்தாண்டும் மாலை போட்டதால் சபரிமலைக்கு செல்ல முடிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் விடுப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு விடுப்பு தர மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஏட்டு முத்துசாமி விரக்தியில் இருந்து வந்தார்.

    இதைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம், சென்னை காவல்துறை இயக்குனர், மயிலாப்பூர் என்ற முகவரியிட்டு ஏட்டு முத்துசாமி ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    என்னால் போலீஸ் துறையில் பணி செய்ய முடியவில்லை. எனக்கு மேல் உயர் அதிகாரிகளால் மன உளைச்சல் மற்றும் சிரமங்களை அனுபவித்து வருகிறேன். எனவே எனது வேலையை ராஜினாமா செய்கிறேன். எனக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    கடிதத்தை கொடுத்த பிறகு ஏட்டு முத்துசாமி தலைமறைவானார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்சு ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் டி.எஸ்.பி. அசோகனிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சபரிமலைக்கு செல்ல விடுப்பு தராததால் ஏட்டு முத்துசாமி வீட்டுக்கும் செல்லாமல் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை பரவாக்கோட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு ஏட்டு மாயமான சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×