search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி: இழப்பீடு கேட்டு சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்
    X

    வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி: இழப்பீடு கேட்டு சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

    தனியார் செங்கல் சேம்பரில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டார் பழுதை வேலைபார்க்க சென்ற தொழிலாளி வி‌ஷ வாயுதாக்கி பலியானார். உறவினர்கள் இழப்பீடு கேட்டு சடலத்துடன் போராட்டம் நடத்தினர்.

    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராமு மகன் முத்துக் கிருஷ்ணன் (வயது 55). இவர் மோட்டார் பழுது பார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் ராஜகம்பீரத்தில் மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியார் செங்கல் சேம்பர் கம்பெனியில் உள்ள கிணற்றில் இருந்த மோட்டாரில் பழுது ஏற்பட்டு இருந்ததை சரி செய்ய முத்துக்கிருஷ்ணன் மற்றும் 2 பேர் சென்றுள்ளனர்.

    அப்போது சுமார் 50 அடி ஆழத்திற்கும் மேற்பட்ட அந்த கிணற்றில் முதலில் முத்துக்கிருஷ்ணன் மட்டும் இறங்கி மோட்டாரை கழற்றி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வி‌ஷவாயு தாக்கி முத்துக்கிருஷ்ணன் மயங்கி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனைப்பார்த்த மற்ற 2 பேரும் கிணற்றில் இறங்காமல் மானாமதுரை போலீசாருக்கும், தீயணைப்புதுறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

    பின்னர் பலியான முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு செங்கல் சேம்பர் கம்பெனி நிர்வாகத்தினர் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று சடலத்துடன் அங்கேயே போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சேம்பர் நிர்வாகத்தினர் உறுதியளித்ததை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×