search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணையின் ‌ஷட்டர் உடைந்த விவகாரத்தில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
    X

    அணையின் ‌ஷட்டர் உடைந்த விவகாரத்தில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

    கிருஷ்ணகிரி அணையில் மதகு ஷட்டர் உடைந்து தண்ணீர் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகில் ‌ஷட்டர் உடைந்த பகுதியை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று பார்வையிட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து மாவட்டங்களும் நீராதார பிரச்சினைகளால் போராட்ட களமாக மாறி உள்ளது. வடகிழக்கு மழையை நம்பி சாகுபடி செய்த விவசாய விளைநிலத்தில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் அழிந்து கொண்டிருக்கிறது. இருக்கின்ற தண்ணீரை பயன்படுத்தி காலம் கடந்தும் சாகுபடி செய்யமுடியும் என்று நம்பியிருந்த மேட்டூர் அணையாக இருந்தாலும், கிருஷ்ணகிரி அணையாக இருந்தாலும் அந்த பகுதி விவசாயிகள் தற்போது அச்சநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சராசரி அளவைவிட குறைவாக பெய்த வடகிழக்கு மழை, கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக வறட்சியை சந்தித்த தமிழக விவசாயிகள், மகிழ்ச்சியோடு இந்த அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யலாம், இந்தாண்டாவது விளைச்சலை பாதுகாக்கலாம் என்று நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு இடிவிழுந்தது போல், கிருஷ்ணகிரி அணையின் மதகில் ‌ஷட்டர் உடைந்து வெள்ள நீராக வெளியேறி அணை தண்ணீர் இல்லாமல் காலியாகியிருக்கிறது. வரும் உபரிநீரும் வெறும் கழிவுநீராக வருவதை பார்த்து வேதனையடைந்திருக்கிறோம்.



    தற்போது முதல்- அமைச்சர், பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கிற எடப்பாடி பழனிசாமி ஊரான, எடப்பாடி அருகே நெரிஞ்சிப்பேட்டை கதவணை உடைந்து தண்ணீர் வெளியேறியிருக்கிறது. 10 கி.மீ தூரம் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி அணைகள் முழுவதும் உடைந்து தண்ணீர் வெளியேறுவதற்கு காரணம், அதை பராமரிக்க ஒதுக்கப்பட்ட நிதி முழுமையும், வேலைகள் செய்யப்பட்டதாக வர்ணம் பூசப்பட்டு, வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஊழல் முறைகேடு செய்யப்பட்டதின் விளைவு அணை கதவுகள் உடைந்து தண்ணீர் வெளியேறி, இன்று தமிழகம் பாலைவனமாக கூடிய பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

    இனி எடப்பாடி பழனிசாமி, தனது முதல்-அமைச்சர் பதவியில் நீடிப்பது நியாயமில்லை. காரணம் நீர்பாசனத்திற்கு தனி அமைச்சர் வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிற நீர்பாசனத்துறையை தானே வைத்துக்கொண்டது எதற்காக?.

    இந்த துறையை வைத்துள்ள முதல்-அமைச்சர் அதை முறையாக கண்காணிக்காததால் அணை கதவுகள் உடைத்துகொண்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் அவர் பதவியில் நீடிப்பது நியாயம் இல்லை. எனவே, அரசியல் நாகரீகம் கருதி, இதற்கு தார்மீக பொறுப்பேற்று, அணைகள் உடைந்ததற்கு நானே பொறுப்பு என மக்களுக்கு அறிவித்துவிட்டு, முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திடவேண்டும். அவர் மறுத்தால் போராட்டத்தை தொடங்குவோம். நீதிமன்றத்தையும் நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×