search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு
    X

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில் கடந்த ஓராண்டாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் (22). என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யா (19) என்பவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து சங்கர் - கவுசல்யா ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ்நிலையத்திற்கு சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சங்கர்-கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார்.

    இந்த கொலை குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசாந்த் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கூட்டுசதி, 5 பேருக்கு மேல் ஒன்று கூடுதல், வன்கொடுமை, பொது இடத்தில் கொடூரமான ஆயுதத்தால் தாக்குதல், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைதானவர்களில் கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை திருச்சி சிறையிலும், மற்ற 10 பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 11 பேர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

    உடுமலை சங்கர் கொலை வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக 1500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் கலெக்டர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படுகிறது.
    Next Story
    ×