search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனை மிரட்டி பணிய வைக்க வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது: ஜி.ராமகிருஷ்ணன்
    X

    தினகரனை மிரட்டி பணிய வைக்க வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது: ஜி.ராமகிருஷ்ணன்

    தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் இருப்பதால் அவர்களை மிரட்டி பணிய வைப்பதற்காக இந்த சோதனை நடப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
    நெய்வேலி:

    நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தினர் ஊழல் செய்திருந்தால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் தவறு இல்லை.

    ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மாநில கட்சிகள், ஒரு குறிப்பிட்ட சிலரை பணிய வைப்பதற்காக வருமான வரித்துறை சோதனையை நடத்துகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் இருப்பதால் அவர்களை மிரட்டி பணிய வைப்பதற்காக இந்த சோதனை நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.

    தமிழக அரசு போக்குவரத்து கழக சொத்துக்கள், பணிமனை ஆகியவற்றை அடமானம் வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமம் சட்டத்தின் கீழ் கேட்டதன் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையின் வெளிப்பாடே ஆகும்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்களான நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் பயிர் செய்திருந்த சம்பா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும். போனஸ், இன்சன்டிவ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, கடந்த கால வேலை நிறுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட 11 தொழிலாளர்களுக்கு அவர்கள் முன்பு என்ன பணி செய்தார்களோ அதே பணியை எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×