search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான கார்த்திக்.
    X
    கைதான கார்த்திக்.

    படிக்கும் காதலிக்கு செலவு செய்ய வாகனங்களை திருடி விற்றேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்

    நாகர்கோவிலில் படிக்கும் காதலிக்கு செலவு செய்ய வாகனங்களை திருடி விற்றதாக கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு அதிகமாக நடந்தது.

    ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, நாகர்கோவில், வடசேரி, கோட்டார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள் கொள்ளையனை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வடசேரி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்த போது சந்தேகப்படும் படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் அந்த வாலிபர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த கருத்தபாண்டி என்ற கார்த்திக் (வயது 24) என்று தெரியவந்தது.

    போலீஸ் விசாரணையில் இவர் தான் நாகர்கோவில் மற்றும் பூதப்பாண்டி பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியவர் என தெரியவந்தது. மொத்தம் 21 மோட்டார் சைக்கிள்களை கார்த்திக் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டில் ஈடுபட்டது குறித்து கார்த்திக் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் என் காதலி படித்து வருகிறார். அவரை பார்க்க வாசுதேவநல்லூரில் இருந்து அடிக்கடி நாகர்கோவில் வருவேன். பஸ்சில் தான் இங்கு வருவேன். அப்போது பஸ் நிலையத்தில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிடுவேன்.

    இதில் வாய்ப்பான வாகனங்களை நைசாக திருடி செல்வேன்.

    அதனை நெல்லை மாவட்டத்தில் அடமானம் வைத்து பணம் பெறுவேன். அந்த பணத்தில் காதலிக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி கொடுப்பேன்.

    ஒவ்வொரு முறை நாகர்கோவில் வரும்போதும் இது போல வாகன திருட்டில் ஈடுபடுவேன். இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு காதலியுடன் ஜாலியாக சுற்றினேன். நேற்று முன்தினமும் இது போல நாகர்கோவில் வந்த போது போலீசில் மாட்டிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் கார்த்திக்கை வாகன திருட்டு வழக்கில் கைது செய்தனர். அவர் திருடிய 21 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைதான கார்த்திக்குடன் வாகன திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×